Published : 25 Sep 2024 10:13 AM
Last Updated : 25 Sep 2024 10:13 AM

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதம் பதிவு செய்த ஹாரி புரூக்: ஆஸி.யை வீழ்த்திய இங்கிலாந்து

ஹாரி புரூக்

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்: இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார் இங்கிலாந்தின் ஹாரி புரூக். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் ஆகும். இதன் மூலம் தனது அணியை அவர் வெற்றி பெற செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் மூன்றாவது போட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் நகரில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி 77, ஸ்மித் 60, ஆரோன் ஹார்டி 44, கிரீன் 42 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 10 ஓவர்களில் அவர் 67 ரன்களை கொடுத்திருந்தார்.

305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. சால்ட் ரன் ஏதும் எடுக்காமலும், பென் டக்கெட் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து தோல்வியை தழுவி இருந்தது. அதோடு ஆட்டத்தின் நெருக்கடியும் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைந்து ஆட்டமிழந்த காரணத்தால் அதிகரித்தது.

அந்த சமயத்தில் வில் ஜேக்ஸ் மற்றும் ஹாரி புரூக் இணைந்து 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வில் ஜேக்ஸ் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஜேமி ஸ்மித் 7 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் ஹாரி புரூக். 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். லிவிங்ஸ்டன் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி, 37.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்த காரணத்தால் டிஎல்எஸ் முறையில் இங்கிலாந்து அணி 46 ரன்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரை இப்போதைக்கு 1-2 என்ற கணக்கில் உயிர்ப்போடு வைத்துள்ளது இங்கிலாந்து. அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவது இங்கிலாந்தின் இலக்காக இருக்கும்.

ஆட்ட நாயகன் ஹாரி புரூக்: “நாங்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் இந்தப் போட்டியில் சிறந்து விளங்கியதாக கருதுகிறேன். நானும், ஜேக்ஸும் பேட் செய்த போது களத்தில் இயன்றவரை நீண்ட நேரம் விளையாட வேண்டும் என முடிவு செய்தோம். அதன் மூலம் எங்களால் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது. முதல் சதம் பதிவு செய்தது நல்ல விஷயம். வரும் நாட்களில் மேலும் சதங்கள் விளாசுவேன் என நம்புகிறேன். நாங்கள் சொன்னதை செய்துள்ளோம்” என புரூக் தெரிவித்தார். இந்த தொடரில் இங்கிலாந்து அணியை அவர்தான் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x