Published : 01 Jun 2018 05:26 PM
Last Updated : 01 Jun 2018 05:26 PM

இதென்ன கேலிக்கூத்து? மே.இ.தீவுகள்-உலக லெவன் போட்டியில் நடந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் கடும் சாடல்

மே.இ.தீவுகளுக்கும் ஐசிசி உலக லெவனுக்கும் இடையே நேற்று நடைபெற்ற டி20 போட்டிக்கு சர்வதேச போட்டி அந்தஸ்து வழங்கப்பட்டதை கேள்விக்குட்படுத்தும் விதமாக நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களின் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது

ஆட்டம் லைவ் ஆக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வர்ணனையாளர் நாசர் ஹுசைன் நடு மைதானத்தில் மைக்குடன் நின்று கொண்டிருந்தது அவ்வளவு நல்லதாகப் பார்க்கப்படவில்லை.

சர்வதேச போட்டி என்றால் அதற்கான பொறுப்புடன் ஆடப்பட வேண்டும், ஆனால் வர்ணனையாளர் நடு ஆட்டத்தில் மைக்குடன் பீல்டர்களூக்கு அருகில் போய் நின்று கொண்டு வர்ணனை செய்கிறேன் பேர்வழி என்றால் அது சர்வதேச ஆட்டம்தானா என்று ரசிகர்கள் கோபாவேசமடைந்துள்ளனர். முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டு வர்ணை செய்தார் நாசர் ஹுசைன்.

இந்தப்புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக ரசிகர்கள் இதென்ன கேலிக்கூத்து, இப்படியெல்லாம் சர்வதேச போட்டிகளில் நடக்கலாமா என்று கடுமையாக ஆட்சேபித்துள்ளனர்.

லிஸ்ட் ஏ போட்டிகளில் கூட இப்படியெல்லாம் நடந்ததில்லை என்ற ரீதியில் ரசிகர்கள் ஐசிசிக்கு கேள்விக்கணை தொடுத்துள்ளனர்.

"ஆட்டம் நடக்கும் போது களத்தில் மைக்குடன் வர்ணனையாளரா? ஐசிசி இதென்ன கேலிக்கூத்து, இது சர்வதேச போட்டியா, லிஸ்ட் ஏ போட்டியா” என்று ட்விட்டர்வாசி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னொருவர் ‘சர்வதேசப் போட்டியில் ரிப்போர்ட்டர் நாசர் ஹுசைன் மைதானத்தில், இது அனுமதிக்கப்பட முடியாதது’ என்று பதிவிட்டுள்ளார்.

“இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர் சர்வதேச போட்டியா?” என்று சாடியுள்ளார்.

பலரும் ஸ்கை கிரிக்கெட், வர்ணனையாளர் நாசர் ஹுசைனின் ‘அடாவடி’ என்றெல்லாம் போட்டுச் சாத்தியுள்ளனர்.

ஏற்கெனவே இந்தப் போட்டியில் உலக லெவன் வீரர்கள் வேண்டா வெறுப்பாக ஆடியதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வர்ணனையாளர் முதல் ஸ்லிப் அருகே நின்று கொண்டு ஆட்டம் நடக்கும் போது நேரலை வர்ணனை அளிப்பதன் பெயர் புதியன புகுத்தலா, பொறுப்பற்றத் தன்மையா, என்ன இது? என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x