Published : 19 Sep 2024 09:35 AM
Last Updated : 19 Sep 2024 09:35 AM

இலங்கை கிரிக்கெட் அணியின் ‘காப்பான்’ - கமிந்து மெண்டிஸ்

சதம் விளாசிய கழிந்து மெண்டிஸ் உடன் குசல் மெண்டிஸ்

கல்லே: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசி அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ். 173 பந்துகளில் 114 ரன்களை எடுத்து அவர் அசத்தினார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று (புதன்கிழமை) கல்லே நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில் பேட்டிங் ஆர்டரில் ஐந்தாவது பேட்ஸ்மேனாக களம் கண்டார் கமிந்து மெண்டிஸ். அனுபவ வீரர் மேத்யூஸ் களத்திலிருந்து பிரேக் எடுத்து வெளியேற கமிந்து உள்ளே வந்தார்.

முதல் நாளின் உணவு நேர இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை. அந்த சவாலான சூழலில் தான் தனது அபார இன்னிங்ஸை கமிந்து மெண்டிஸ் வெளிப்படுத்தினார். அதன் பலனாக சதம் விளாசினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடும் 7-வது போட்டி இது. அதற்குள் நான்கு சதம் மற்றும் நான்கு அரைசதம் பதிவு செய்துள்ளார். 800+ ரன்களை கடந்துள்ளார். அண்மையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகளில் விளையாடி இருந்தார். அங்கு இரண்டு அரைசதம் மற்றும் ஒரு சதம் பதிவு செய்தார். வங்கதேசத்தில் விளையாடி 2 சதம் மற்றும் ஒரு அரைசதம் பதிவு செய்துள்ளார். இரண்டு கைகளிலும் பந்து வீசும் திறன் கொண்ட ஆல் ரவுண்டர்.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்தப் போட்டியில் தான் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவர் களம் கண்டுள்ளார். இதில் குசல் மெண்டிஸ் உடன் இணைந்து 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அஜஸ் படேல் வீசிய சுழலில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இலங்கை விளையாடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x