Published : 18 Sep 2024 12:50 PM
Last Updated : 18 Sep 2024 12:50 PM

“நான் இறுதிக்குள் நுழைந்தபோது பிரதமர் ஏன் தொலைபேசியில் அழைக்கவில்லை?” - வினேஷ் போகத்

வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 100 கிராம் உடல் எடை அதிகம் இருந்ததால் அபாரமான வெற்றிகளைப் பெற்றும் பதக்க வாய்ப்பை இழந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், இப்போது அரசியலில் குதித்துள்ளார்.

ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவாரா, மாட்டாரா? என்பது வேறு கேள்வி என்றாலும், அவர் கூறுவது என்னவெனில், “வாழ்க்கைப் போராட்டத்தை வெல்ல வேண்டும்” என்பதே.

பாரிஸ் ஒலிம்பிக் தகுதி இழப்பு இதயம் உடைந்த தருணம் முதல் தற்போது அரசியல் களம் வரை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்துள்ளார் வினேஷ் போகத்.

அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது: “நான் அரசியலில் நுழைய வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், போராட்டம் என்னும் மிகப்பெரிய சவால் நம் முன் இருக்கும் போது மாற்றங்களை ஏற்படுத்த அரசியல் பலம் தேவை என்று முடிவெடுத்தேன். என்னுடைய நன்மதிப்பை நான் இழந்து விடுவேன் என்றார்கள். ஆனால், என் மீது அன்புதான் அதிகமாகியிருக்கிறது. இது கடவுளின் சங்கல்பம், நான் என் வாழ்க்கை விதியை பின் தொடர்கிறேன்.

வீராங்கனைகளுக்காகப் போராடியதுதான் மக்களிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்துள்ளது. நான் போராடியது அவர்கள் குடும்பத்தின் மகள்களுக்கும் பெண்களுக்கும் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். மற்றவர்களுக்காக நாம் நல்லது செய்யும் போது அவர்களிடமிருந்து நமக்கு கிடைப்பது அன்பு மட்டுமே. பாலியல் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் விவசாயப் போராட்டம் போல் பெரிய அளவில் எழுச்சி பெறவில்லை.

நான் போராட்டத்தில் இருந்தாலும் மல்யுத்தத்தையும் கண நேரம் கூட மறக்கவில்லை. காயம் ஏற்பட்டாலும் ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்ற உறுதியுடன் தான் இருந்தேன். பாரிஸ் ஒலிம்பிக்கில் நடந்ததை பெரிய இழப்பு என்று எண்ணுவதோ, நான் பெற்ற வெற்றிகளைக் கொண்டு சமாதானம் அடைவதோ என்னால் முடியாத காரியம்.

100 கிராம் உடல் எடை கூடியிருப்பாதாகக் காட்டியவுடன், வெறுமை உணர்வுதான் ஏற்பட்டது. நான் கெஞ்சினேன், மன்றாடினேன்.. ‘சரியாப் பாருங்க சரியாப் பாருங்க’ என்று திரும்பத் திரும்ப அவர்களிடம் மன்றாடினேன், கெஞ்சிக் கூத்தாடினேன். அங்கு ஒரு ஹங்கேரியப் பெண் என் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டாள்.

உண்மையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்ட பிறகே எடை சரி பார்க்கும் படலம் தேவையற்ற ஒன்று. அல்லது எனக்கு கொஞ்சம் கூடுதல் அவகாசம் அளித்திருக்கலாம். பெண்களுக்குக் கொஞ்சம் கூடுதல் சலுகை அளிக்க வேண்டும். ஏனெனில், பெண்களின் உடல் வாகு ஆண்களிலிருந்து வேறுபட்டது. பெண்களால் ஒருநாளைக்கு 3 கிலோ எடைக்கும் மேல் குறைக்க முடியாது. ஏனெனில், பெண்களின் உடலிலிருந்து நீர் அவ்வளவு சீக்கிரம் வெளியேறாது. அந்த ஒலிம்பிக் கிராமத்தில் மற்ற வீராங்கனைகள் என்னை ஆரத் தழுவி ஆறுதல் சொன்னதோடு எனக்கு தவறு நடந்துள்ளது என்றும் கூறினார்கள்.

போராட்டங்களின் போது பிதமரின் மவுனம் குறித்து: பிரதமர் விளையாட்டு வீரர்களைச் சந்திக்கிறார், அவர் உண்மையிலேயே விளையாட்டை நேசிப்பவராக இருந்தால், விளையாட்டு வீரர்கள் மீது உண்மையான நேயம் அவருக்கு இருந்தால் இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது, போராட்டம் செய்கிறோம், அவர் ஒன்றுமே செய்யாதது ஏமாற்றமளிக்கிறது. அவருக்கு அனைத்தும் தெரிந்திருந்தும் ஒன்றுமே சொல்லாமல் மவுனம் காப்பது விளையாட்டு வீரர்கள் மீதான உண்மையான அன்பு இல்லை என்பதையே காட்டுகிறது. அவர் தன் அதிகாரத்தை மட்டுமே காட்ட விரும்புகிறார்.

‘சாம்பியன்களின் சாம்பியன் நீங்கள்’- என்று பிரதமர் கூறியது குறித்து: அவர் எப்போது ட்வீட் செய்தார்? நான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பிறகு ஒருநாள் முழுதும் அவரிடமிருந்து ட்வீட் பதிவு ஏதும் வரவில்லை. ஆனால், அவர் மற்ற அனைத்து தடகள வீரர்களையும் அழைத்தார். இந்த எடை சமாச்சாரம் அடுத்த நாள் நிகழ்ந்தது. நான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குறித்து எனக்கு ஏன் ஒரு அழைப்பு கூட பிரதமரிமிடம் இருந்து வரவில்லை? காரணம் தெரிந்ததே.

மீண்டும் மல்யுத்தத்துக்கு வருவதென்பது என் உடலுக்கு ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் என் இதயத்தையும், மனதையும் யார் திருப்தி செய்வது? இருக்கும் சூழ்நிலைகளை என் மனமும் இதயமும் ஏற்கவில்லை எனில் மீண்டும் வருவதில் அர்த்தமில்லை. நான் விரும்பினால் இன்னும் 2 ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்றிருக்க முடியும். எந்தத் தடையையும் உடைக்க முடியும் என்று நினைக்கும் வரை சரி, இன்றைய சூழ்நிலை அப்படி இல்லையே. இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார் வினேஷ் போகத்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x