Published : 16 Sep 2024 02:52 PM
Last Updated : 16 Sep 2024 02:52 PM

‘கோலியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்’ - பாபர் அஸமை சாடிய யூனிஸ் கான்

லாகூர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸம். இந்நிலையில், பேட்டிங் விஷயத்தில் பாபர் அஸம் கவனம் வைக்க வேண்டும், விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

“பாபர் அஸமுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. மிக இளம் வயதில் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். அடுத்ததாக தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவரது கவனம் இருக்க வேண்டும். கேப்டன்சி என்பது ஒரு சின்ன விஷயம். அதிலிருந்து அவர் வெளிவந்து பாகிஸ்தான் அணிக்காக ரன் குவிக்க வேண்டும்.

நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை குவித்துள்ளேன். அவர் 15,000 ரன்களை குவிக்கலாம். விராட் கோலியை பாருங்கள். கேப்டன்சி பொறுப்பில் இருந்து வெளியேறினார். இப்போது ரன்கள் குவிக்கிறார். நிறைய சாதனைகளை தகர்க்க உள்ளார். என்னை பொறுத்தவரை அனைத்து வீரர்களும் அணிக்காக விளையாட வேண்டும். அதற்கான எனர்ஜி போக மீதமிருந்தால் தனிப்பட்ட முறையில் விளையாடலாம்” என யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

29 வயதான பாபர் அஸம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 54 போட்டிகளில் ஆடி 3962 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அணியை வழிநடத்தி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கடைசியாக விளையாடிய 16 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட பதிவு செய்யவில்லை. இந்தச் சூழலில் தான் அவரை யூனிஸ் கான் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x