Published : 16 Sep 2024 09:30 AM
Last Updated : 16 Sep 2024 09:30 AM

டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 2-வது இடம்

பிரஸ்ஸல்ஸ்: டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 2-வது இடம் கிடைத்தது. முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நேற்று முன்தினம் தொடங்கியது.

உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட போட்டியின் இறுதி சுற்று தற்போது பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வருகிறது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றிருந்தனர். 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபின் சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே 9-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில்… இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் இறங்கினார். மொத்தம் 6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் அதிகபட்சமாக 3-வது சுற்றில் 87.86 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடத்தைக் கைப்பற்றினார்.

இதே போட்டியில் கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். அவர் 87.87 மீட்டர் தூரம் எறிந்தார். இதே போட்டியில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் 85.97 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடத்தைப் பெற்றார்.

முதலிடம் பெற்ற பீட்டர்ஸுக்கு டைமண்ட் லீக்கோப்பை மற்றும் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டன. நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத் தொகையாக 12 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன.

இடது கையில் எலும்பு முறிவுடன் பங்கேற்ற நீரஜ்: டைமண்ட் லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, தனது இடது கையில் எலும்பு முறிவு பிரச்சினையுடன் பங்கேற்றிருப்பது தெரியவந்துள்ளது. எலும்பு முறிவு இருந்தபோதும் மன உறுதியுடன் அவர் போட்டியில் பங்கேற்று 2-வது இடத்தை கைப்பற்றி நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார். அவரது இடது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு கடும் வலியுடன் போட்டியில் பங்கேற்றுள்ளார் நீரஜ்.

இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறும்போது, “கடந்த திங்கள்கிழமை பயிற்சியில் இருந்தபோது எனது விரலில் வலி ஏற்பட்டது. பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தால் வலி இருந்தது என்று முதலில் நினைத்தேன். ஆனால் எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது இடது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இந்த ஆண்டு முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த அணி நிர்வாகத்துக்கும், ரசிகர்களுக்கும் எனது நன்றி. 2024-ம் ஆண்டில் என்னை சிறந்த தடகள வீரராக மாற்றிய அனைவருக்கும் நன்றி. 2025-ல் சந்திப்போம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x