Published : 17 Aug 2014 12:39 PM
Last Updated : 17 Aug 2014 12:39 PM

9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் பரம வைரிகள்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான 23 வயதுக்குட் பட்டோருக்கான நட்பு ரீதியி லான சர்வதேச கால்பந்து போட்டி பெங்களூரில் இன்று நடை பெறுகிறது.

களத்தில் பரமவைரிகளாக பார்க்கப்படும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான கால்பந்து தொடர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரில் இரு போட்டிகள் நடைபெறுகின்றன. 2-வது போட்டி வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.

கடைசியாக இவ்விரு அணிகளுக்கு இடையே 2005-ல் கால்பந்து தொடர் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடியது. இந்திய கால்பந்து அணி கடைசியாக கடந்த மார்ச் 5-ம் தேதி வங்கதேசத்துடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடியது. அதன்பிறகு இப்போது பாகிஸ்தானை சந்திக்கிறது.

இந்திய பயிற்சியாளர் விம் கோவர்மன்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான இரு போட்டிகளிலும் எப்படியாவது வென்றாக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். சர்வதேச தரவரிசையில் இந்தியா 150-வது இடத்திலும், பாகிஸ்தான் 165-வது இடத்திலும் உள்ளன. தரவரிசையில் முன்னிலையில் இருப்பது இந்தியாவுக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான திறமையான வீரர்களை கண்டறி வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

இந்திய அணி கோலடிப்பதில் கேப்டன் சுனில் சேத்ரியை நம்பியுள்ளது. செக்.குடியரசில் விளையாடிய பயிற்சி போட்டிகளில் சுனில் சேத்ரி 5 கோல் அடித்தார். எனவே சுனில் சேத்ரி பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்தியாவின் இளம் அணிக்கு நம்பிக்கையளிப்பதாக அமையும். மிட்பீல்டர்கள் ஆல்வின் ஜார்ஜ், பிரணாய் ஹால்டர் உள்ளிட்டோரும் சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செக்.குடியரசில் பயிற்சி பெற்ற பிறகு இந்திய அணியின் பின்களம் வலுவானதாக உருவெடுத்திருக்கிறது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பின்கள வீரர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும் என பயிற்சியாளர் விம் கோவர்மன்ஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் ஸ்டிரைக்கர் கலீமுல்லா, மிட்பீல்டர் முகமது அடில் ஆகியோரின் ஆட்டத்தைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். அடில், சமீபத்தில் கிர்கிஸ்தான் லீக்கில் விளையாடும் டார்டாய் பிஷ்கெக் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் கிர்கிஸ்தான் லீக்கில் கலிமுல்லாதான் அதிக கோல் அடித்துள்ளார். 16 ஆட்டங்களில் விளையாடி அவர் 17 கோல்களை அடித்திருக்கிறார். மிட்பீல்டர்கள் டைனமோ, சேடம் ஆகியோர் கலிமுல்லாவுக்கு உதவியாக ஆடும்பட்சத்தில் அவர் ஆதிக்கம் செலுத்த முடியும்.

கடைசியாக 2005-ல் இரு அணிகள் மோதிய தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தாலும், பாகிஸ்தான் அதிக கோல்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது முதல் ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2-வது ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. 3-வது போட்டியில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வென்றது.

இந்தியா-பாக். ஆட்டம் எப்போதுமே சிறப்பானது

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கால்பந்து போட்டி எப்போதுமே சிறப்பானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக சிறப்பாக தயாராகியிருக்கிறோம் என்றார் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி. இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்தப் போட்டி இரு நாடுகளிடையிலான நட்புறவை மேம்படுத்த உதவும் என நம்புகிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே சிறப்பாக ஆடியிருக்கிறேன். அது இரு அணி களுக்குமே தெரியும். இந்தப் போட்டி பாகிஸ்தானுக்கும் சிறப்பான போட்டியாகும்” என்றார்.

போட்டி நேரம் : பிற்பகல் 3.30 நேரடி ஒளிபரப்பு : டிடி ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x