Published : 14 Sep 2024 11:34 AM
Last Updated : 14 Sep 2024 11:34 AM
பொதுவாக தோனி என்றாலே கூல், நிதானம் என்றெல்லாம் கூறப்படுவதுண்டு, ஆனால், அவருக்கு நெருங்கிய வட்டங்களில் உள்ளவர்களுக்கே தெரியும், பார்ட்டி எவ்வளவு பெரிய டென்ஷன் பார்ட்டி என்பது. அப்படிப்பட்டத் தருணைத்தான் தமிழ்நாடு வீரர் தற்போதைய வர்ணனையாளர் எஸ்.பத்ரிநாத் பகிர்ந்துள்ளார்.
இன்சைடு ஸ்போர்ட்டில் பத்ரிநாத் கூறியது: “அவரும் மனிதர்தான்... தன் நிதானத்தை இழந்தார் தோனி. ஆனால், களத்தில் இவ்வாறு தோனி நிதானத்தை இழக்க மாட்டார், எதிரணியினர் தோனி டென்ஷன் ஆகிவிட்டார் என்று தெரியக் கூடாது என்று நினைப்பார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஆர்சிபி-க்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் 110 ரன்கள் இலக்கை நாங்கள் சேஸ் செய்தோம். கொத்தாக விக்கெட்டுகளை இழந்து அந்தப் போட்டியில் நாங்கள் தோற்றோம்.
அனில் கும்ப்ளே பந்தை லாப் ஷாட் ஆடப்போய் நான் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினேன். நான் ஓய்வறையினுள் நின்று கொண்டிருந்தேன். தோனி அப்போது ஓய்வறைக்குள் நுழைந்தார். அங்கு சிறு வாட்டர் பாட்டில் இருந்தது, தோனி கோபத்தில் அந்தத் தண்ணீர் பாட்டிலை விட்ட உதையில் வெளியே தெறித்துப் போய் விழுந்தது. எங்கள் அனைவராலுமே தோனியை நேருக்கு நேர், அவரது கண்களைச் சந்திக்க முடியவில்லை” என்று பத்ரிநாத் பகிர்ந்து கொண்டார்.
இந்தத் தருணம் மட்டுமல்ல ஏகப்பட்ட தருணங்களில் தோனி நிதானம் இழந்திருக்கிறார். ஒருமுறை வங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மானை இடித்த இடியில் அவர் கை பிசகி பெவிலியன் செல்ல நேரிட்டது, தவறு முஸ்தபிசுர் ரஹ்மான் மேல்தான், வேண்டுமென்றே குறுக்காக வந்து கொண்டிருந்தார், தோனி அவருக்குப் பாடம் எடுத்தார். மற்றொரு முறை மிட்செல் ஜான்சனும் இவ்வாறு குறுக்கே வர ஒரு மோது மோதினார் தோனி, வேண்டுமென்றுதான் மோதினார் அப்போது மிட்செல் ஜான்சனும் தன் தோள்பட்டையப் பிடித்தபடியே சற்று வலியை உணர்ந்தார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் ஐபிஎல் போட்டி ஒன்றில் டக் அவுட்டிலிருந்து மைதானத்திற்குள் இறங்கி நடுவரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். அதே போல் மைக் ஹஸ்ஸியை ஒருமுறை தோனி ஸ்டம்ப்டு செய்தார், பெரிய திரையிலும் அவுட் என்றே காட்டப்பட்டது, ஆனால் நடுவர், அது தவறு ஹஸ்ஸி தொடர்ந்து ஆடலாம் என்று சொன்ன போது கடும் கோபமடைந்த தோனி நடுவரிடம் கோபமாக வாக்குவாதம் செய்தார்.
அதேபோல் ஒருமுறை மணீஷ் பாண்டே கவனம் இல்லாமல் ரன்னர் முனையில் இருந்தபோது தோனி அவரைக் கடுமையாகச் சாடியதும் நினைவிருக்கலாம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...