Published : 14 Sep 2024 10:30 AM
Last Updated : 14 Sep 2024 10:30 AM
இன்று நாம் தமிழ் கிரிக்கெட் வர்ணனையின் படுமோசமான சீரழிவைப் பார்த்து வருகிறோம். வர்ணனை என்ற பெயரில் வெறும் அரட்டைகள் நடந்து வரும் இக்காலத்தில் வர்ணனையை ஓர் அரும்பெரும் பணியாக மதித்து கிரிக்கெட் வர்ணனையை ஒரு தொழிலாக வரிந்து கொண்டவர்தான் இந்த ஜோத்பூர் தேவேந்திர குமார்.
இவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்தில் தான் வர்ணனையை ஒரு தொழிலாகத் தேர்வு செய்ததன் தருணத்தை வர்ணிக்கும் போது, ஷார்ஜாவில் சச்சின் டெண்டுல்கர் மணற்புயல் அடித்த அன்று ஆடிய இன்னிங்சில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் காஸ்பரோவிக்ஸை சச்சின் சிக்ஸ் அடித்ததையும் அப்போது டோனி கிரேக் சொன்ன வர்ணனையையும் கேட்டு ‘எமக்குத் தொழில் வர்ணனை’ என்று முடிவெடுத்துள்ளார். அப்படி அவர் முடிவெடுக்கும் போது அவருக்கு வயது 10.
இப்போது தேவேந்திர குமார் ஆப்கானிஸ்தான் போட்டிகளின் முழு நேர வர்ணனையாளராகி செயல்பட்டு வருகிறார். ஆப்கன் விளையாடும் சர்வதேச போட்டிகள் மட்டுமல்ல, உள்நாட்டு போட்டிகளுக்கும் தேவேந்திர குமார்தான் வர்ணனை. “எனக்கு டோனி கிரேக்கின் குரலும் அவரது ஆங்கிலத்தின் லயமும் என்னை ஈர்த்தன, வர்ணனைதான் இனி நமக்குத் தொழில் என்று அப்போது முடிவு செய்தேன். அதன் பிறகு மணிக்கணக்காக வர்ணனையை நானே பயிற்சி செய்யத் தொடங்கினேன். அனைத்து விளையாட்டுக்களின் வர்ணனைகளையும் ஒன்று விடாமல் ரேடியோவில் கேட்பேன்” என்கிறார் தேவேந்திர குமார்.
வர்ணனை அவருக்கு எளிதாக அமையவில்லை. இவரோ ராஜஸ்தான் மாநிலத்தின் சிறு கிராமம் சுதர்புரத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலம் பேச வராது, மேலும் விளையாட்டுத் துறை சார்ந்த பின்புலமும் இவருக்கு இல்லை. பிபிசி வானொலியின் ‘ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட்’ நிகழ்ச்சியைக் கேட்டு வளர்ந்தார். கால்பந்து, டென்னிஸ் போன்ற ஆட்ட வர்ணனைகளையும் கூர்ந்து கவனித்து வந்தார். சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மேட்ச் நடக்கும் போதெல்லாம் அங்கு சென்று வர்ணனை செய்துள்ளார். இதனால் பலர் இவரை கேலியும் செய்துள்ளனர், சிலர் ரசிக்கவும் செய்துள்ளனர்.
“எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் முதலில் ரேடியோவில் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே எனக்குப் புரியாது. ஆனால் அவர்கள் பேசிய விதம், அந்த ஆங்கில உச்சரிப்புப் போன்றவை என்னை பெரிதும் ஈர்த்தது. மெதுவாக ஆங்கிலச் செய்தித்தாள்களை வாசிக்க ஆரம்பித்தேன். மெதுவாக என் ஆங்கில அருஞ்சொல் வளம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படியாக வர்ணனையில் நாட்டம் அதிகரித்து படிப்படியாகக் கற்றுக் கொண்டு இன்று வர்ணனை எனக்கு 24 மணி நேர பணியாகியுள்ளது” என்கிறார் தேவேந்திர குமார்.
இதே காலக்கட்டத்தில் நர்ஸிங் கோர்சையும் படித்த தேவேந்திர குமாருக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பும் கிடைத்தது, அவர் வேண்டாம் என்று உதறிவிட்டார். ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ நிகழ்ச்சியைக் கேட்டுக் கேட்டு ஆங்கிலத் திறமையை வளர்த்துக் கொண்டார். ஆரம்பத்தில் இவரது வர்ணனைக்காக ஜெய்ப்பூரில் நடக்கும் சாதாரண தொடர்களில் இவரை அழைத்துள்ளனர். ஒரு போட்டிக்கு 500 ரூபாய் வரை ஆரம்பத்தில் கிடைத்ததாம்.
2009-ம் ஆண்டு அப்போதைய ஐபிஎல் சேர்மனான லலித் மோடி இவரது வர்ணனை ஆசையைப் பார்த்து வியந்து இவருக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். அங்கு தேர்ந்த வர்ணனையாளர், கிரிக்கெட் எழுத்தாளரான ஆலன் வில்கின்ஸ் இவருக்கு குருவாக வர்ணனையின் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்துள்ளார்.
இப்படியாக தேறிய தேவேந்திர குமாருக்கு ஆப்கான் கிரிக்கெட் வர்ணனையாளராக வாய்ப்புக் கிடைத்தது. ஷார்ஜாவில் 2017-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் இடையே நடந்த ஒருநாள் போட்டிதான் தேவேந்திர குமாரின் வர்ணனை அறிமுகப் போட்டியாகும்.
“என்னால் நம்ப முடியவில்லை, இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. சச்சின் சிக்சரை டோனி கிரேக் வர்ணித்த அதே இடத்தில் இன்று நான் எனும் போது என்னால் நம்ப முடியவில்லை.” என்றார்.
இன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார் தேவேந்திர குமார். ஆனால், இவரது இன்று வரையிலான வருத்தம், சச்சின் டெண்டுல்கர் ஆடும் போட்டியில் வர்ணனை செய்ய முடியவில்லை என்பதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT