Published : 13 Sep 2024 08:02 AM
Last Updated : 13 Sep 2024 08:02 AM
புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் இந்திய ஆடவர் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, மொராக்கோவின் திசிர் மொஹமதுவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 30-வது காய் நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
இதேபோன்று அர்ஜூன் எரிகைசி 40-வது காய் நகர்த்தலின் போது ஜாக் எல்பிலியாவையும், விதித் குஜராத்தி 27-வது காய் நகர்த்தலின் போது ஒவாகிர் மெஹ்தியையும், ஹரிகிருஷ்ணா 33-வது காய் நகர்த்தலின் போது அனஸ் மோயாத்தையும் தோற்கடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. உலக சாம்பியன்ஷிப்பில் விளையாட உள்ள டி.குகேஷுக்கு முதல் சுற்றில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.
மகளிர் பிரிவில் இந்திய அணி தனதுமுதல் சுற்றில் ஜமைக்காவை எதிர்கொண்டது. இதில் ஆர்.வைஷாலி, அதானி கிளார்க்குடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆர்.வைஷாலி 29-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மற்ற ஆட்டங்களில் திவ்யா தேஷ்முக் 76-வது காய் நகர்த்தலின் போது ரேச்சல் மில்லரையும், தானியா சச்தேவ் 41-வது காய் நகர்த்தலின் போது கேப்ரியலா வாட்சனையும் தோற்கடித்தனர். அதேவேளையில் வந்திகாஅகர்வால் - ரேஹன்னா பிரவுன் மோதியஆட்டம் 53-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதில் இந்திய மகளிர் அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT