Published : 11 Jun 2018 06:31 PM
Last Updated : 11 Jun 2018 06:31 PM
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில், மீண்டும் அணிக்குத் திரும்பி அடுத்த பயணத்துக்குத் தயாராகியுள்ளார்.
35 வயதாகும் டேல் ஸ்டெயின் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய கடந்த 32 டெஸ்ட் போட்டிகளில் 27 போட்டிகளில் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கடைசியாக ஸ்டெயின் களமிறங்கினார். அதன்பின் காலில், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அதன்பின் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று அதில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகப் பந்து வீசவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்தில் சோமர்செட் அணியில் இடம் பெற்று விளையாடிய ஸ்டெயின் சசெக்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். இதையடுத்து, மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஸ்டெயின் தேர்வாகியுள்ளார்.
இலங்கைக்கு ஜூலை மாதம் பயணம் மேற்கொள்ள இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டும் ஸ்டெயின் தேர்வாகியுள்ளார்.
வேகப்பந்து வீச்சில் ஸ்டெயின் தவிர்த்து, காகிசோ ரபாடா, பிலாண்டர், இங்கிடி ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் 3 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஷான் வான் பெர்க் அறிமுகமாகிறார். மேலும், கேசவ் மகராஜ் , தப்ரியாஸ் ஷாம்சி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணியின் தேர்வு ஒருங்கிணைப்பாளர் லிண்டா ஜோன்டி கூறுகையில், ''ஸ்டெயின் அணிக்குத் திரும்பியதை நாங்கள் வரவேற்கிறோம். மோர்கல் ஓய்வுக்கு பின் ஸ்டெயின் வந்துள்ளது அணிக்கு ஊக்கத்தை அளிக்கும். மேலும் முதுகு வலியில் இருந்து ரபாடா மீண்டும் அணிக்குத் தேர்வாகியுள்ளார். இவர்களால், அணியில் வேகப்பந்துவீச்சு பலப்படும்'' எனத் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் ஜூலை 12 முதல் 16-ம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், கல்லே நகரில் 20 முதல் 24 வரை 2-வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்:
டூப்பிளசிஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, தெம்பா புவம்மா, குயின்டன் டீ காக், தேயுனிஸ் டி புருயன், டீன் எல்கர், கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்கிரம், லுங்கி இங்கிடி, பிலாண்டர், காகிசோ ரபாடா, ஷாம்ஸி, டேல் ஸ்டெயின், ஷான் பெர்க்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT