Published : 12 Sep 2024 08:06 AM
Last Updated : 12 Sep 2024 08:06 AM

இந்தியாவில் எஸ்ஜி பந்துகளை எதிர்கொள்வது பெரிய சவால்: சொல்கிறார் வங்கதேச பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ்

லிட்டன் தாஸ்

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தொடரின் 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியின் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ் 138 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதிலும் வங்கதேச அணி 26 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நெருக்கடியை சந்தித்த நிலையில் லிட்டன் தாஸ் தனது அபாரமான ஆட்டத்தால் சதம் விளாசி சரிவில் இருந்து அணியை மீளச் செய்திருந்தார்.

பாகிஸ்தான் தொடரில் லிட்டன் தாஸுடன் கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ, மொமினுல் ஹக், முஸ்பிகுர் ரஹிம், ஷகிப் அல் ஹசன், ஷத்மான்இஸ்லாம் உள்ளிட்டோர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். பாகிஸ்தான் தொடரை அடுத்து வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிவரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்ரபம் மைதானத்தில் தொடங்குகிறது.

பாகிஸ்தான் தொடரில் கூக்கபுரா பந்துகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த வகையிலான பந்துகள் இலங்கை, வங்கதேசம்,நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் இந்தியாவில் எஸ்ஜி பந்துகள் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பந்துகள் கடினமாக இருக்கும் எனவும் இதை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் எனலிட்டன் தாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், கூறியதாவது:

இந்தியாவில் பயன்படுத்தப்படும் எஸ்ஜிபந்துகள் வித்தியாசமானவை. எஸ்ஜி பந்துக்கு எதிராக விளையாடுவது கொஞ்சம் கடினம். கூக்கபுரா பந்து பழையதாக இருக்கும்போது விளையாடுவது எளிது. ஆனால்இது எஸ்ஜி பழையதாக இருக்கும் போதுதப்பிப்பது கடினம். பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் சிறந்த கிரிக்கெட்டைவிளையாடினோம். ஆனால் அந்த தொடர் முடிந்துவிட்டது.

நாங்கள் முன்னோக்கிச் செல்வது முக்கியம். ஊடகங்கள் பாகிஸ்தான் தொடரை பற்றி பேசாமல் இருந்தால் உதவியாக இருக்கும். என்னை பொறுத்தவரை ஒரு வீரராக அந்தத் தொடர் முடிந்துவிட்டது. அதை கடந்து வந்துவிட்டேன். சிறப்பாக செயல்பட்டால், மக்கள் ஆதரிக்கிறார்கள். இது ஊக்கம் அளிக்கிறது. இதைவிட சிறந்தது வேறு ஏதும் இல்லை. இதை நெருக்கடியாக நினைக்கவில்லை.

நாங்கள் டெஸ்ட் போட்டியில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இந்த வடிவத்தில் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டும். இதுதான் எங்களுக்கு பிரதான சவால். நான் 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன், எனவே அனுபவங்கள் உள்ளன. அடிக்க முடியும் என்று நான் நம்பும் பந்துகளை அடிக்க முயற்சிக்கிறேன். இப்போதெல்லாம் ரன்கள் எடுப்பது மிகவும் முக்கியம். பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை அணுகுவதைப் போலவே நானும் பேட்டிங் செய்கிறேன். இவ்வாறு லிட்டன் தாஸ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x