Published : 11 Sep 2024 09:14 PM
Last Updated : 11 Sep 2024 09:14 PM

ஜார்க்கண்ட் குத்துச்சண்டை போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 கிலோ பிரிவை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜார்கண்டில் வரும் செப்.13ம் தேதி அன்று நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவையும் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்திய பள்ளிகளுக்கான சான்றிதழ்கள் தேர்வு கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) அமைப்பின் பாடத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 3 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க சென்னை அடையாரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் அல்பெரிக் அபய் என்ற 8-ம் வகுப்பு மாணவரும் விண்ணப்பித்துள்ளார். அதன்படி வரும் செப்.13ம் தேதி அன்று ஜார்கண்டில் நடைபெறும் தேசிய அளவிலான இந்த குத்துச்சண்டைப் போட்டியில் இருந்து 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவு நீக்கப்பட்டு விட்டதாக சிஐஎஸ்சிஇ அறிவித்தது. இதை எதிர்த்து அல்பெரிக் அபய் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே. வெங்கடபதியும், மத்திய அரசின் சிஐஎஸ்சிஇ சார்பில் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதியும் ஆஜராகி வாதிட்டனர்.இதையடுத்து நீதிபதி, இந்தாண்டு நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் இருந்து 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவை நீக்கியிருப்பது என்பது பாரபட்சமானது என மத்திய அரசின் கவுன்சிலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக சிஐஎஸ்சிஇ அறிவிப்பை ரத்து செய்து ஜார்கண்டில் நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான 50 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவையும் சேர்க்க வேண்டும் என்றும், அதில் மனுதாரர் உள்ளிட்ட போட்டியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x