Published : 11 Sep 2024 07:18 PM
Last Updated : 11 Sep 2024 07:18 PM

‘அனுமதியின்றி படம் எடுத்தார்’ - பி.டி.உஷா குறித்து வினேஷ் போகத் அதிர்ச்சி குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா மீது அதிர்ச்சி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் ஓய்வு பெட்ரா மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். பாரிஸ் ஒலிம்பிக்கின் போது தனக்கான ஆதரவை பி.டி.உஷா வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார் வினேஷ் போகத். இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவரது உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது தேசமே அவருக்கு ஆதரவாக நின்றது. இந்தச் சூழலில் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார். ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தனியார் ஊடக நிறுவனத்திடம் அவர் கூறியது: “எனக்கு அப்போது எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை. அங்குள்ள மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட போது பி.டி.உஷா மேடம் என்னை வந்து பார்த்திருந்தார். ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார். மூடிய கதவுகளுக்கு பின்னால் நிறைய அரசியல் நடக்கும் என சொல்வார்கள். அது போல பாரிஸிலும் அரசியல் செய்யப்பட்டது. அதை அறிந்து நான் மனம் உடைந்து போனேன். மல்யுத்த விளையாட்டில் இருந்து விலக வேண்டாம் என பலரும் சொன்னார்கள். அனைத்து இடத்திலும் அரசியல் உள்ளது. அப்படி இருக்கும்போது எதற்காக நான் தொடர்ந்து விளையாட வேண்டும்.

அதுவும் நீங்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போது, வெளியில் என்ன நடக்கிறது என தெரியாதபோது, வாழ்வின் கடினமான காலத்தில் இருக்கும்போது எதுவும் சொல்லாமல் ஒரு புகைப்படத்தை எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, எனக்கு ஆதரவாக இருப்பது போல ஏன் போஸ் கொடுக்க வேண்டும். அப்படி ஆதரவு தர வேண்டிய அவசியம் இல்லை. அதோடு தகுதி நீக்கம் குறித்து நான் மேல்முறையீடு செய்தது கூட எனது சொந்த முயற்சியால்தான். தேசத்துக்காக விளையாட சென்ற எனக்கு இந்த நிலை” என அவர் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த விளையாட்டில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெற்றுள்ளார். தொடர்ந்து தனது அரசியல் பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராடிய மல்யுத்த வீராங்கனைகளில் வினேஷ் போகத்தும் ஒருவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x