Published : 11 Sep 2024 12:47 AM
Last Updated : 11 Sep 2024 12:47 AM
சென்னை: சுமார் 15 மாதங்களுக்கு முன்னர் ஐபிஎல் 2023 சீசனில் யஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசி இருந்தார் ரிங்கு சிங். அதனால் ட்ரோல்களை எதிர்கொண்ட யஷ் தயாள், தற்போது தனது திறனால் அதனை வென்றுள்ளார். இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றுள்ளது.
தனது மகனின் வீழ்ச்சி மற்றும் விடாமுயற்சி மூலம் கண்டுள்ள எழுச்சி குறித்து யஷ் தயாளின் தந்தை சந்தர்பால் தயாள். சுமார் ஓராண்டு காலமாக ரிங்குவின் விளாசலால் அதிகம் வீட்டை விட்டு வெளியில் வருவதையே தவிர்த்துக் கொண்டார் சந்தர்பால். சிறு பிள்ளைகள் முதல் சுற்றத்தார்கள் அனைவரும் இகழ்ந்தது அதற்கு காரணம்.
“அந்த நேரத்தில் எங்களை பார்க்கும் பள்ளி செல்லும் பிள்ளைகள் கூட ‘ரிங்கு சிங் மற்றும் 5 சிக்ஸர்கள்’ என சொல்வார்கள். அது ஒரு விபத்து போல இருந்தது. ஏன் எனது மகனுக்கு அப்படி நடக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். அவனது அம்மாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவனை குஜராத் டைட்டன்ஸ் அணி விடுவித்தது.
இருந்தாலும் ஒரு குடும்பமாக நாங்கள் யாஷுக்கு ஊக்கம் தர முடிவு செய்தோம். அது இந்திய அணிக்காக அவன் விளையாடும் வரையில் நாங்கள் தரவேண்டிய ஊக்கமாக இருக்க வேண்டும் என விரும்பினோம். எந்த கட்டத்திலும் அவன் கிரிக்கெட் விளையாட்டை விட்டு விடக் கூடாது என உறுதியாக இருந்தோம். இப்போது வங்கதேச டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்கான இந்திய அணியில் அவன் இடம் பிடித்துள்ளான்.
அப்போதே (யஷ் பந்து வீச்சை ரிங்கு விளாசியதுக்கு பிறகு) கிரிக்கெட்டில் இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல, இது கடைசியும் அல்ல என அவனிடம் தெரிவித்தோம். யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசினார். ஆனால், கிரிக்கெட்டை ஆகச் சிறந்த பவுலர்களில் ஒருவராக பிராட் இன்று அறியப்படுகிறார் என சொன்னோம்.
எந்தவொரு தந்தைக்கும் தனது மகன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது மிகப்பெரிய விஷயம். இதற்கு முழு காரணம் அவனது உழைப்பு. அவனது திறன் நேச்சுரலானது. அவனுக்கு மனதளவில் நாங்கள் திடம் அளித்து வருகிறோம். அவர் துலீப் டிராபி தொடரில் அபாரமாக பந்து வீசி இருந்தான். விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இனி அவன் இந்திய அணிக்காக ஆட தேர்வாவது தேர்வாளர்களின் கையில் உள்ளது என அறிந்தேன். அவனது திறனை பார்த்த அவர்கள், இப்போது அணியில் வாய்ப்பு வழங்கி உள்ளார்கள்.
இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதகம் அவனுக்கு உள்ளது. இருந்தும் ஆடும் லெவனில் ஆடுவது குறித்து அணி தான் முடிவு செய்யும். வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் நாங்கள் குடும்பத்துடன் நேரில் பார்க்க உள்ளோம்” என சந்தர்பால் தயாள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய யஷ் தயாள், 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துலீப் டிராபி தொடரிலும் தனது ஸ்விங் திறனை வெளிப்படுத்தி இருந்தார். சிராஜ், முழு உடற்தகுதியுடன் இல்லாத பட்சத்தில் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பை யஷ் தயாள் பெற வாய்ப்புள்ளது. அதை அவரது குடும்பம் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT