Last Updated : 15 Jun, 2018 08:55 PM

 

Published : 15 Jun 2018 08:55 PM
Last Updated : 15 Jun 2018 08:55 PM

போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை: உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவாரா?

 

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கி, குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.14 கோடி(1.88 கோடி யூரோ) அபாரதம் செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளார் என ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் நாட்டுக்கு எதிராக இன்று உலகக் கோப்பைப் போட்டியில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட இருக்கும் நிலையில், இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ரியல்மாட்ரிட் உள்ளிட்ட கிளப்களில் விளையாடி வந்த ரொனால்டோ கடந்த 2011 முதல் 2014-ம் ஆண்டுவரை விளம்பர ஒப்பந்தத்தில் நடித்தது தொடர்பாக 1.71 கோடி டாலர் வரிசெலுத்தாமல் ஏமாற்றியதாக ஸ்பெயின் நாட்டு வருமானவரித்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு முதலில் தொடரப்பட்டபோது, தனக்கும் வரி ஏய்ப்புக்கும் தொடர்பில்லை என்று ரொனால்டோ தெரிவித்தார். அதன்பின் ஆதாரங்கள் அடிப்படையில் ரொனால்டோ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஸ்பெயின் நாட்டுச் சட்டப்படி முதல்முறையாக குற்றம் செய்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றால், அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அந்த வகையில், ரொனால்டோ குற்றத்தை ஒப்புக்கொண்டதால், 2 ஆண்டுகள் சிறையும், ரூ.14 கோடி அபராதமும் செலுத்த முன்வந்துள்ளார். ரொனால்டோ முதல்முறையாக வரி ஏய்ப்பு குற்றத்தில் சிக்கி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் சிறைக்கு அனுப்பப்படமாட்டார். மாறாக எச்சரித்து கண்காணிப்பில் அனுப்பப்படுவார். அதேசமயம், ரூ.14 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.

கடந்த 2016-ம் ஆண்டு லயோனல் மெஸ்ஸியும் வரி ஏய்ப்பு குற்றத்தில் சிக்கியதால் அவருக்கும் அவரின் தந்தைக்கும் 47லட்சம் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும், மார்சிலோ, ரிக்கார்டோ கார்வால்கோ, ஏஞ்செல் டி மரியா, அலெக்சிஸ் சான்செக், ஜாவியர் மாஸ்செரினோ, ராடாமெல், பேபியா ஆகிய வீரர்களிடமும் ஸ்பெயின் நாட்டு வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x