Published : 23 Jun 2018 08:38 AM
Last Updated : 23 Jun 2018 08:38 AM
உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் நேற்று அர்ஜெண்டினாவுக்கு முக்கியமான போட்டியில் ஐஸ்லாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வீழ்த்தியது, அர்ஜெண்டினாவுக்கு ஓரளவுக்கு நிம்மதிப் பெருமூச்சை வரவழைத்திருக்கும்.
ஏனெனில் ஐஸ்லாந்து வென்றிருந்தால் ஜோர்ஹே சம்போலியின் மெஸ்ஸி புகழ் அர்ஜெண்டினாவுக்கு சங்கு ஊதப்பட்டிருக்கும். இப்போது நைஜீரியாவுக்கு எதிராக அர்ஜெண்டினா 3 புள்ளிகளைப் பெற்றால் கடைசி 16 சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அவ்வளவு சுலபமல்ல, காரணம் அர்ஜெண்டினா அணியின் வீர்ரகள் தேர்வு, உத்தி, ஆட்ட உணர்வு எல்லாமே தற்போது குரேஷியா உதைக்குப் பிறகு சோர்வு கண்டுள்ளனர்.
மேலும் குரேஷிய அணிக்கு ஐஸ்லாந்து அதிர்ச்சியளிக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
அஹமட் மியூஸாவை இந்தப் போட்டிக்குக் கொண்டு வந்தவர் மேனேஜர் கெர்னாட் ரோர். அவரும் கொண்டு வந்த மேனேஜரின் நம்பிக்கையை தனது 2 பிரமாதமான கோல்களினால் தக்கவைத்தார்.
ஐஸ்லாந்து கோட்டைவிட்ட பெனால்டி வாய்ப்பு:
ஆட்டத்தின் 80வது நிமிடங்களில் நைஜீரிய வீரர் எபூஹி ஐஸ்லாந்து வீரர் ஃபின்பாட்வார்சன் என்பவரை கீழே தள்ளினார், பெனால்டி பகுதிக்குள் இது நடந்ததால் நடுவர் காங்கர் வீடியோ உதவியை நாடினார். ஃபவுல் உறுதியானது. பெனால்டி கிக்கும் உறுதியானது.
ஐஸ்லாந்து ரசிகர்கள் உணர்ச்சிப்பெருக்கில் ஆரவாரம் மேலிட காத்திருக்கும் போது கில்ஃபி சிகுர்ட்சன் பந்தை ஸ்பாட் கிக்கிற்காக வைத்தார். கோல் கீப்பரை குழப்பி அவரைத் தவறான திசைக்குச் செல்லுமாறு செய்தவர் தானும் தவறான திசையில் கோல் பாருக்கு மேல் அடித்து வீணடித்தார். வலது மேல் மூலைக்கு குறிவைத்தார், ஆனால் பந்து நான் மேலேதான் செல்வேன், என்னை வலைக்குள் அடைக்க முடியாது என்று தப்பித்துச் சென்றது, பந்து சிரிக்க ஐஸ்லாந்து சோகமடைந்தது.
அகமட் மியூஸாவின் இரண்டு அற்புத கோல்கள்:
ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் லாங் பால் ஒன்று நைஜீரிய வீரரினால் எடுத்துக் கட்டுப்படுத்தப்பட விக்டர் மோசஸ் வலது உள்புறமாக மிக வேகமாக எடுத்துச் சென்றார். பிறகு மியூஸாவுக்கு ஒரு பாஸைத் தூக்கி அடித்தார் மியூஸா அதனை அருமையாகக் கட்டுப்படுத்தி ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹால்டர்சனைத் தாண்டி முதல் கோலை அடித்தார்.
2வது கோல் அகமட் மியூசாவின் தனிமனித முயற்சியாகும். 75வது நிமிடத்தில் லாங் பால் ஒன்றை அழகாகக் கட்டுப்படுத்தி மிக வேகமாக எடுத்துச் சென்றார், நடுவில் ஐஸ்லாந்து வீரர் கேரி அர்னாசனை அனாயாசமாகக் கடந்து சென்று எடுத்துச் செல்ல ஆபத்தை உணர்ந்த ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹால்டர்சன் கோலிலிருந்து முன்னேறி வந்தார் படு வேகத்தில் பந்துடன் வந்த மியூஸா இரண்டு தடுப்பு வீரர்களைக் கடந்து 10 அடியிலிருந்து கோல் அடித்தார். இவையெல்லாம் நாம் எழுதுவதைவிடவும் வேகமான விநாடிகளில் நடந்தது.
நைஜீரியா 2-0. 93வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் சவர்ஸ்ஸன் அடித்த கோல் நோக்கிய வாய்ப்பை நைஜீரியா முறியடித்தது.
முதல் 45 நிமிடங்களில் நைஜீரியாவை ஐஸ்லாந்து பிரச்சினைக்குள்ளாக்கவில்லை என்றாலும் சில வாய்ப்புகளைத் தங்களுக்காக உருவாக்கினர். ஆனாலும் பயனில்லை, நேற்று நைஜீரியா கொஞ்சம் குறிக்கோளுடன் ஆடியது, ஐஸ்லாந்திடம் ஏமாறக்கூடாது என்ற திண்ணம் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT