Published : 08 Sep 2024 08:35 AM
Last Updated : 08 Sep 2024 08:35 AM
பெங்களூருவில் நடைபெற்று வரும் ‘இந்தியா ஏ - இந்தியா பி’ அணிகளின் துலீப் கோப்பைப் போட்டியின் 3ம் நாளான நேற்று மதியம் குறைந்த ரசிகர்களைக் குஷிப்படுத்தி சர்பராஸ் கான், ரிஷப் பந்த் ஆடிய ஆக்ரோஷ அதிரடி ஆட்டம் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதற்கான போட்டி இந்திய அணியில் எத்தகையது என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்தது.
முதல் இன்னிங்சில் சர்பராஸ் கான் சகோதரர் முஷீர் கான் இந்தியா பி அணியை தன் அசாத்திய 181 ரன்களால் தூக்கி நிறுத்தி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் என்ற நிலையிலிருந்து தன் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை 321 ரன்களுக்குக் கொண்டு சென்றார் என்றால், இந்தியா ஏ அணிக்காக இந்திய டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ்தீப் அற்புதமானப் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கலீல் அகமதுவும் அபாரமாக வீசி 2 விக்கெட்டுகளிக் கைப்பற்ற ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா ஏ அணியில் கேப்டன் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் உட்பட ஒருவரும் அரை சதம் எடுக்க முடியாமல் ஆட்டமிழந்து அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்தியா பி அணி 90 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதில் இந்தியா பி அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ் குமார், நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், மூன்றாம் நாளான நேற்று இந்தியா பி அணி தன் 2வது இன்னிங்ஸை 90 ரன்கள் முன்னிலையில் ஆடிய போது கலீல் அகமது, ஆகாஷ் தீப்பின் அற்புதமான ஆக்ரோஷ பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை 9 ரன்களிலும் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரனை 4 ரன்களிலும் முதல் இன்னிங்ஸ் நாயகன் முஷீர் கானை டக்க்கிலும் இழந்தனர். இதில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் கலீல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்ற இந்தியா பி அணி 3 விக்கெட்டுகளை 22 ரன்கள் என அல்லாடியது.
அப்போது ஒன்று சேர்ந்தனர் சர்பராஸ் கானும், ரிஷப் பந்தும். முதலில் சர்பராஸ் கான் தான் ஆரம்பித்தார், காரணம், இவருக்கு முதலில் ஒரு லைஃப் கிடைத்தது, திலக் வர்மா கை வழியாகவே ஒரு கேட்ச் வாய்ப்புச் சென்றது, சர்பராஸ் பார்த்தார் இந்தப் பவுலிங்கை அடித்தால்தான் சரிப்பட்டு வரும் என்று தன் அசலான ஆக்ரோஷ வழியைக் கடைப்பிடித்தார். குறிப்பாக கலீல், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான் பவுலிங்கை அடித்து நொறுக்குவது என்ற முடிவை எட்டினார் சர்பராஸ் கான்.
ஆகாஷ் தீப் வீசிய ஒரே ஓவரில் சர்பராஸ் கான் 5 பவுண்டரிகளை விளாசினார். பிரமாதமான கட் ஷாட், பிளிக் ஷாட், அற்புதமான ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், ஒரு ஸ்டிய்ர் என்று ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள். ஆகாஷ் மனமுடைந்தார். ரிஷப் பந்தும் நான் என்ன சர்பராஸ் அடிப்பதைப் பார்ப்பதற்காக எதிர்முனையில் நிற்கிறேன் என்று தன் பங்குக்கு மட்டையை விட்டார். ஆனால் ஹை ரிஸ்க் அடியாக அது அமைந்தது.
முதலில் தன் பங்கிற்கு ஆகாஷ் தீப் பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஆடினார், அது துருவ் ஜுரெலுக்கும் ராகுலுக்கும் இடையே சென்றது, இருவரும் வேடிக்கைப் பார்த்தனர். அடுத்து டெல்லி கேபிடல்ஸ் நினைவில் ஒரு பந்தை விளாச நினைத்தார் பந்து கொடியேற்றமானது, துருவ் ஜுரெல், கேட்சை பிடிக்க வந்த குல்தீப் யாதவ்விடம் என் கேட்ச் என் கேட்ச் என்று அலறியபடியே சென்று கோட்டை விட்டார், உண்மையில் குல்தீப் கேட்ச் அது. கலீல் அகமதுவை பண்ட் அடித்த ஹூக் ஷாட் மிஸ் ஹிட் ஆனாலும் பவுண்டரிக்குப் பறக்க கலீல் அகமதுவின் வெறுப்பு தெரிந்தது லேசாக ரிஷப் பந்தை கிண்டலடித்தார். இதே ஓவரில் சர்பராஸ் கான் ஃபுல் லெந்தும் குட் லெந்தும் இல்லாத ஒரு ரெண்டும் கெட்டான் லெந்த் பந்தை பாயிண்டில் சிக்ஸ் விளாசினார்.
அரை சதம் எடுக்கவிருந்த சர்பராஸ், தன் ஆக்ரோஷ வழியில் வீழ்ந்தார், ஆவேஷ் கான் பந்தை ஜுரெலிடம் கேட்ச் கொடுத்து 36 பந்தில் 46 என்று வெளியேறினார். ஆவேஷ் கான், சர்பராஸ் கானுக்கு ஆக்ரோஷ ‘செண்ட் ஆஃப்’ கொடுத்தார். பந்தும் இவரும் 55 பந்துகளில் 72 ரன்களை விளாசினர். ரிஷப் பந்த், தன் பங்கிற்கு குல்தீப் யாதவ்வை ஒரு பவுண்டரியும் ஒரு பெரிய சிக்சரையும் விளாசி அரைசதம் எடுத்தார். 47 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சர்களுடன் பண்ட் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சர்பராஸ், ரிஷப் பந்த் ஷோ முடிந்தாலும் இந்தியா பி அணியின் முன்னிலை 240 ரன்களுக்கு உயர்ந்தது, நேற்றைய முடிவில் இந்தியா பி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் என்று இருந்தது. வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment