Published : 08 Sep 2024 06:25 AM
Last Updated : 08 Sep 2024 06:25 AM
பாரிஸ்: ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இந்திய பாரா தடகள வீரர் நவ்தீப் சிங். இது பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள 7-வது தங்கமாக அமைந்துள்ளது.
எப்41 பிரிவில் அவர் தங்கம் வென்றுள்ளார். 23 வயதான அவர் டோக்கியோவில் தவறவிட்ட பதக்கத்தை பாரிஸில் வென்றுள்ளார். 47.32 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்திருந்தார் அவர்.
முன்னதாக, நவ்தீப் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். ஈரான் வீரர் சாதிக் பேட் சாயா (Sadegh Beit Sayah) 47.64 மீட்டர் தூரம் இதே பிரிவில் ஈட்டியை வீசி இருந்தார். ஆனாலும் அவர் இரண்டு மஞ்சள் கார்டுகளை பெற்ற காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதையடுத்து இரண்டாம் இடம் பிடித்த நவ்தீப் சிங்கின் வெள்ளி தங்கமாக மாற்றி வழங்கப்பட்டது. போட்டிக்கு பிறகு கண்கலங்கி நின்று சாதிக் பேட் சாயாவுக்கு நவ்தீப் ஆறுதல் தெரிவித்தார்.
பாரிஸ் பாராலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியா வென்றுள்ள 17-வது பதக்கம் இது. 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தமாக 29 பதக்கங்களை பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் பதக்க பட்டியலில் 16-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. முதல் இடத்தில் சீனா உள்ளது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment