Published : 06 Sep 2024 07:19 AM
Last Updated : 06 Sep 2024 07:19 AM

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: ஹைதராபாத், சத்தீஸ்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத், சத்தீஸ்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் டிஎன்சிஏபிரெசிடெண்ட் லெவன் - ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 313 ரன்களும் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி 327 ரன்களும் சேர்த்தன. 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதராபாத் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 81 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 260 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழ்நாடு பிரெசிடெண்ட் லெவன் அணி 68.2 ஓவர்களில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 40, மாதவபிரசாத் 39 ரன்கள் சேர்த்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் தனய் தியாகராஜன் 5, அனிகீத் ரெட்டி 4 விக்கெட்கள் வீழ்த்தினர். 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

திண்டுக்கலில் நடைபெற்ற மற்றொரு அரைஇறுதியில் சத்தீஸ்கர்,டிஎன்சிஏ லெவன் அணிகள் மோதின. இதன் முதல் இன்னிங்ஸில் சத்தீஸ்கர் 467 ரன்களும், டிஎன்சிஏ லெவன் 194 ரன்களும் எடுத்தன. 275 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய சத்தீஸ்கர் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 82 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் மூலம் சத்தீஸ்கர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை திண்டுக்கலில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் - சத்தீஸ்கர் அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x