Published : 27 Jun 2018 10:45 AM
Last Updated : 27 Jun 2018 10:45 AM

மெஸ்ஸியின் முதல் கோல், மார்கஸ் ரோஜோவின் உயிர்கொடுத்த கோல்: அர்ஜெண்டினா அடுத்த சுற்றில் பிரான்சைச் சந்திக்கிறது

நைஜீரியா வீரர் இடோவூ நேற்று மெஸ்ஸிக்குப் பிரியாவிடை கொடுப்போம் என்றார், பயிற்சியாளர் ரோர் அதனை மறுத்தார், ஆனால் ஜீனியஸுக்கு பிரியாவிடை கொடுக்க இவர்கள் யார் என்று கேட்கும் விதமாக ஆட்டம் தொடங்கி 14ம் நிமிடத்திலேயே நம்பர் 10 ஜெர்ஸி மின்ன மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையின் முதல் கோலை அடித்தார், அர்ஜெண்டீனா ரசிகர்கள் உற்சாகத்தில் கண்ணீர் மல்க காட்சியளித்தனர், ரோஜோ கோலில் போட்டியை வென்றவுடன் அர்ஜெண்டினா வீரர்களின் கண்களிலும் கண்ணீர்.

ஆம்! நைஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தி அர்ஜெண்டினா இறுதி 16 சுற்றுக்கு முன்னெறியது.

நைஜீரியாவின் விக்டர் மோசஸ் பெனால்டியில் முதல் கோலை அடித்து சமன் செய்ய அடுத்த 35 நிமிடங்களுக்கு அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு மட்டுமல்ல உலக அர்ஜெண்டினா ரசிகர்களுக்கும் நெஞ்சில் திக் திக்.. நைஜீரியா வெற்றி பெற்றிருக்கும், ஆனால் வாய்ப்புகளைக் கோட்டை விட்டதோடு பெனால்ட்டி கேட்டுக் கொண்டே காலத்தை ஓட்டினர். கடைசியில் மார்கஸ் ரோஜோ அடித்த அற்புதமான கோல் அர்ஜெண்டினாவுக்கு உயிர் கொடுத்தது, வீரர்கள் கண்ணீர் மயம்.

அர்ஜெண்டின பயிற்சியாளர் சம்போலி ஒருமுறை கூறினார் உலகக்கோப்பை என்பது மெஸ்ஸியின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி என்று.

குரேஷியாவுக்கு எதிராக ஆட்டம் முழுதுமே பந்தை மெஸ்ஸி 49 முறைதான் தொட்டார் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன, ஆனால் வாழ்வா சாவா நைஜீர்யாவுக்கு எதிராக நேற்று இடைவேளைவரையிலேயே மெஸ்ஸி கால்களில் பட்டதன் எண்ணிக்கை அதிகம்.

ஆட்டத்தின் 14ம் நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் எவர் பனேகா நடுமைதானத்திலிருந்து ஒரு திகைக்கவைக்கும் பாஸை அனுப்ப வலது புறம் அதை அழகாக வாங்கிய மெஸ்ஸி தன் தொடையால் கட்டுப்படுத்தி பிறகு பந்து தரையில் படாமல் இடது காலால் தொட்டு பிறகு வலது காலினால் கோல் வலையின் டாப் கார்னருக்குள் தள்ள ஸ்டேடியம் வெடித்து எழுந்தது.

கடந்த போட்டியை விட மெஸ்ஸியின் பங்களிப்பு இதில் செயல்பூர்வமாக இருந்தது ஒரு முறை கொன்சாலோ ஹிகுவெய்னுக்கு ஒரு பாஸை அனுப்பினார், ஆனால் அவரால் அதனை கோலாக மாற்ற முடியவில்லை. பிறகு பனேகா கொடுத்த பாஸை ஏஞ்செல் டி மரியா நைஜீரியா தடுப்பைக் கடந்து ஊடுருவி எடுத்து சென்றார். ஆனால் லியான் பால்கன் ஃபவுல் செய்தார். ஃப்ரீ கிக் வந்தது மெஸ்ஸி எடுத்தார், ஆனால் பந்து வைடாகச் சென்றது. இன்னொரு ஆட்டத்தில் குரேஷியா இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே ஒரு கோல் அடித்து அர்ஜெண்டினாவுக்கு ரிலீஃப் கொடுத்தது இவர்களுக்குத் தெரியாது, ஆனால் அர்ஜெண்டினா தங்களுக்கே ஆப்பு வைத்துக் கொண்ட தருணம்தான் நைஜீரியாவுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பாகும்.

ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் நைஜீரியாவின் லாங் த்ரோவுக்கு 3 அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை நோக்கி வந்தனர். விளைவு நைஜீரியாவுக்குக் கிடைத்தது கார்னர். எடீபோ அடித்த கார்னர் தலையால் முட்டி தள்ளி விடப்பட்டது, ஆனால் இந்த நடைமுறையில் மஸ்சரானோ பாலோகன் என்ற நைஜீரிய வீரரைப் ஃபவுல் செய்ததால் மஸ்செரானோ புக் செய்யப்பட உடனடியாக வீடியோ ரெஃபரலுக்கும் அழைக்கப்பட்டது. பெனால்டி கிக் நைஜீரியாவுக்கு.

 

நைஜீரிய வீரர் விக்டர் மோசஸ் பெனால்டி கிக்கை அடித்தார், அர்மானி வலது புறம் நகரக் காத்திருந்து அதற்கு எதிர்த்திசையில் வலைக்குள் திணித்தார், வாயடைத்தனர் அர்ஜெண்டினா ரசிகர்கள், வீரர்கள், 1-1 என்று சமன் ஆனது. ஒரே பந்துக்கு 3 வீரர்கள் பாய்ந்ததுதான் அங்கு அர்ஜெண்டினா செய்த தவறு. வீரர்களிடையே கம்யூனிகேஷன் இடைவெளி என்று இதற்கு வர்ணனையில் காரணம் கூறப்பட்டது.

இந்த நைஜீரியக் கோலுக்குப் பிறகே அர்ஜெண்டினா முகாமில் பதற்றம் அதிகரித்தது. மேலும் துல்லியமின்மைகள் தொடர்ந்தன. இதனால் அகமட் மியூஸா, நைஜீரியாவின் அபாய வீரர் இடது புறம் வேகமாக கோலை நோக்கிச் சென்று வில்பிரெட் எண்டீடியிடம் கொடுக்க அவர் மேலே அடித்தார். இன்னொரு முறை மியூஸாவின் பாஸை இழந்த ரோஜோ தன் கையில் பந்து பட்டுச் சென்றதை அறியவில்லை. இது பெனால்டி தருணம் என்று கூறப்பட்டது, ஆனால் ரெஃப்ரி வீடியோ ரெஃபரல் செய்து இல்லை என்றார். பிறகு எடீபோ ஒரு ஃப்ரீ கிக்கை வலையின் பக்கவாட்டில் அடித்தார்.

 

இதற்கிடையே ஹிகுவெய்ன் ஒரு பந்தை தூக்கி ஸ்டேண்டுக்கு அடித்தார், ஆனால் இவருக்குப் பின்னால் பெனால்டி பகுதியில் மெஸ்ஸி இருக்கிறார், ஷூட் செய்யும் நிலையில் இருக்கிறார், ஆனால் ஹிகுவெய்ன் அந்த வாய்ப்பை விரயம் செய்தார். சரி அர்ஜெண்டினாவுக்கு எல்லாம் முடிந்து விட்டது என்ற நிலையில் 86வது நிமிடத்தில் அந்த முக்கியக் கணம் வந்தது, மெர்கடோ வலது புறத்திலிருந்து நடுவுக்கு ஒரு கிராஸ் செய்ய அவர் கடும் நெருக்கடிக்கிடையில் வலது காலால் கோலின் இடது மூலையில் பந்தைச் செலுத்தினார். அர்ஜெண்டினாவே எழுந்தது, மரடோனா உணர்ச்சிமயத்தின் உச்சக் கட்டத்தில் இருந்தார்.

ஆனாலும் இன்னொரு நைஜீரியா கோல் அர்ஜெண்டினாவை முடித்திருக்கலாம், அங்கு குரேஷியாவுக்கு எதிராக ஐஸ்லாந்து கோல் அடித்திருக்கலாம் இவை இரண்டில் ஏதாவது ஒன்று நடந்திருந்தால் அர்ஜெண்டினா பாடு திண்டாட்டம்தான். ஆட்டத்தின் கடைசியில் நேரம் விரயம் செய்ததற்காக மெஸ்ஸி புக் செய்யப்பட்டார். 95வது நிமிடத்தில் விசில் ஊதப்பட்டவுடன் அர்ஜெண்டினா வீரர்கள், ரசிகர்கள் கண்களில் கண்ணீர். இறுதி 16 சுற்றில் பிரான்சைச் சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x