Published : 05 Sep 2024 08:48 AM
Last Updated : 05 Sep 2024 08:48 AM
2025 ஐபிஎல் சீசனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் திராவிட் மீண்டும் திரும்புகிறார்.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி உலக சாம்பியன் ஆனதோடு திராவிடின் இந்திய அணித் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. ஐபிஎல் 2025-க்கான மெகா ஏலம் தொடர்பாக ராகுல் திராவிடிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக விவாதித்ததாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ராகுல் திராவிட்டிற்கு நீண்ட கால பழக்கம் உள்ளது. திராவிடின் மேற்பார்வையில்தான் யு-19 அணியில் சஞ்சு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ராகுல் திராவிடின் பிணைப்பு என்பது நீள்நெடும் பின்னணி கொண்டது. 2012, 2013 ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் கேப்டனாக இருந்தார் ராகுல் திராவிட். பிறகு 2024, 2015 ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராகவும் ஆலோசகராகவும் இருந்தார். 2016-ல் திராவிட் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்குப் பயிற்சியாளராகச் சென்றார்.
2019-ல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைமைப்பொறுப்பு வகித்தார். பிறகு அங்கிருந்து 2021-ல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ராகுல் திராவிட் மட்டுமல்லாமல் இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக திராவிட்டுடன் இருந்த விக்ரம் ராத்தோரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திராவிட்டின் உதவிப்பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் இயக்குநராக இருக்கும் குமார் சங்கக்காரா ராஜஸ்தான் ராயல்ஸ் குழுமத்தின் பிற அணிகளான தென் ஆப்பிரிக்க டி20 லீகின் பார்ல் ராயல்ஸ் அணி மற்றும் கரீபியன் பிரீமியர் லீகின் பார்பேடோஸ் ராயல்ஸ் அணி ஆகியவற்றின் தலைமைப்பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.
2008-ல் ஐபிஎல் தொடக்க சீசனில் மறைந்த ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்ன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் தொடரில் கோப்பையை வென்றதோடு சரி. அதன் பிறகு இன்னும் சாம்பியனாகவில்லை. அடுத்து 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனாக ராஜஸ்தான் ராயல்ஸ் ரன்னர்களாக முடிந்தனர். 2023 சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு வர முடியவில்லை. 2024-ல் குவாலிஃபையர் 2-ல் தோற்கடிக்கப்பட்டனர்.
2025 தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீவிர நோக்கத்துடன் இப்போது ராகுல் திராவிட்டை மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment