Published : 06 Jun 2018 10:42 AM
Last Updated : 06 Jun 2018 10:42 AM
ம
த்திய அமெரிக்க கண்டத்தை சேர்ந்த கோஸ்டா ரிகா உலகக் கோப்பை தகுதி சுற்றில் 10 ஆட்டங்களில் 4 வெற்றி, 4 டிரா, 2 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடம் பிடித்திருந்தது. முதல் இரு ஆட்டங்களில் டிரினிடாட், அமெரிக்க அணிகளை வீழ்த்திய கோஸ்டாரிகா அடுத்த ஆட்டத்தில் மெக்சிகோவிடம் தோல்வி கண்ட நிலையில் ஹோண்டூராஸ், பனாமா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது. இதையடுத்து டிரினிடாட், அமெரிக்கா அணிகளை மீண்டும் வீழ்த்தி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. ஆனால் அந்த அணி தகுதி சுற்றின் கடைசி ஆட்டங்களில் வெற்றி பெறத் தவறியது. இதில் இரு ஆட்டங்களை டிரா செய்த கோஸ்டாரிகா, கடைசி ஆட்டத்தில் பனாமாவிடம் வீழ்ந்திருந்தது.
கோஸ்டாரிகா அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது இது 5-வது முறையாகும். அந்த அணி பிரேசிலில் நடைபெற்ற 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கால் இறுதி வரை கால்பதித்து அசத்தியிருந்தது. அந்தத் தொடரில் கால் இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 3-4 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டிருந்தது. முன்னதாக அந்த அந்த அணி லீக் சுற்றில் பலம் வாய்ந்த இத்தாலி, உருகுவே அணிகளை வீழ்த்தி தனது பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. இம்முறை கோஸ்டா ரிகா அணி ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.
இதே பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து, செர்பியா அணிகள் உள்ளன. இதில் தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ள செர்பியா மட்டுமே சற்று பலம் குறைந்த அணியாக கருதப்படுகிறது. எனினும் கடந்த உலகக் கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணிகளை கோஸ்டாரிகா வீழ்த்தி உள்ளதால் இம்முறையும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. பிரேசில் உலகக் கோப்பையில் விளையாடிய 12 வீரர்கள் இம்முறையும் அணியில் இடம் பிடித்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக ஒருங்கிணைந்து விளையாடி வருவதால் இவர்களது அனுபவம் பெரிதும் உதவக்கூடும்.
லிஸ்பன் கிளப் அணிக்காக விளையாடிய வரும் நடுகள வீரரான பிரையன் ரூயிஸ், ரியல் மாட்ரிட் அணியின் கோல் கீப்பரான கீலர் நவாஸ், முன்னாள் ஆர்சனல் ஸ்டிரைக்கர் ஜோயல் காம்ப்பெல், நடுகள வீரரான செல்ஸோ போர்ஜெஸ் ஆகியோர் கோஸ்டாரிகா அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட கெண்டல் வாட்சன், ஜியான்கார்லோ கோன்சலஸ், ஜானி அகோஸ்டா ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்க ஆயத்தமாகி உள்ளனர்.
இவர்களில் கீலர் நவாஸ், கோஸ்டாரிகா கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரராக கருப்படுகிறார். பிரேசில் உலகக் கோப்பையில் கோஸ்டாரிகா அணி கால் இறுதிவரை கால் பதித்ததில் கீலர் நவாஸ் முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். உலகில் சிறந்த கோல் கீப்பர்களில் ஒருவராக திகழும் கீலர் நவாஸ், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி, சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோப்பை வென்றதிலும் நவாஸின் பங்கு அளப்பரியது. இம்முறையும் பல முன்னணி அணிகளுக்கு கோஸ்டரிகா அணி அதிர்ச்சி கொடுக்கக்கூடும் என கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT