Published : 03 Sep 2024 08:26 PM
Last Updated : 03 Sep 2024 08:26 PM

பாகிஸ்தானை 2-0 என வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்: WTC அட்டவணையில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியது!

வெற்றிக் கொண்டாட்டத்தில் வங்கதேச அணியினர்.

ராவல்பிண்டியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித்தள்ளி வெற்றி பெற்று வரலாறு காணாத வெளிநாட்டு டெஸ்ட் தொடர் 2-0 வெற்றியை ஈட்டியுள்ளது. வங்கதேச டெஸ்ட் வரலாற்றில் இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகிறது என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இத்தோல்வி கருப்பு எழுத்துக்களால் எழுதப்படும்.

ஏனெனில் பாகிஸ்தான் 2021-க்குப் பிறகு தன் சொந்த மண்ணில் 10 டெஸ்ட்களில் வெற்றி பெற முடியாத நிலையே நீட்டித்துள்ளது என்பதோடு முதல் நாள் மழையினால் முழுதும் வாஷ் அவுட் ஆன நிலையில், போட்டியை 4 நாட்களில் ட்ரா செய்யக் கூட திராணியில்லாமல் கோட்டை விட்டிருப்பது அதன் கிரிக்கெட் அமைப்பியக் கோளாறுகளை பட்டவர்த்தனம் ஆக்கியுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இங்கிலாந்தை 5ஆம் இடத்துக்கு தள்ளி வங்கதேசம் 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

26/6 என்று தன் முதல் இன்னிங்சில் இருந்த வங்கதேச அணி லிட்டன் தாசின் ஆச்சரியமான 138 ரன்களாலும், மெஹதி ஹசன் மிராஸ் என்னும் ஆல்ரவுண்டரின் எழுச்சியினாலும் 262 ரன்கள் வரை வர முடிந்த போது, சாதாரண ஸ்விங் பவுலிங்கை வைத்துள்ள வங்கதேசத்திடம் 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் 172 ரன்களுக்கு மடிகிறது என்றால், பாகிஸ்தான் பேட்டிங்கில் உள்ள ஆழமான பிரச்சனைகளும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் உள்ள கோளாறுகளும் பட்டவர்த்தனமே.

ஹசன் மஹமூது 5 விக்கெட்டுகளையும், நஹித் ராணா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். வங்கதேசத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு 185 ரன்கள் என்றால், அந்த இலக்கை அனாயசமாக 56 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வங்கதேசம் ஒரு தொழில்பூர்வ சேசிங்கைச் செய்து வரலாறு படைத்தது. அதுவும் இடது கை தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் 39 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் எடுத்த விரைவு கதி 40 ரன்கள், வங்கதேச சேசிங்கின் வெற்றிக்கு தூண்டுதலாக அமைந்தது.

ஷத்மான் இஸ்லாம் 24, கேப்டன் ஷாண்ட்டோவின் 38, மோமினுல் ஹக்கின் 34, முஷ்பிகுர் ரஹிம் 22, ஷாகிப் அல் ஹசன் 21 என்று அனைவரும் பங்களிப்பு செய்து மிகவும் உழைத்துப் பெற்ற வெற்றியாக்கி விட்டனர். ஆட்ட நாயகனாக லிட்டன் தாஸும், தொடரின் நாயகனாக மெஹதி ஹசன் மிராசும் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 7 ஆண்டுகளில் தங்களது 20 அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் 4வது வெற்றியைத்தான் வங்கதேசம் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் 3வது டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

இந்தத் தொடரின் முக்கிய அம்சம் வங்கதேச அணியின் கேப்டன் ஷாண்டோவின் அற்புதமான கேப்டன்சியைச் சுட்டலாம். அணியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, பவுலிங் சேஞ்ச், கள வியூகம், பாகிஸ்தான் போன்ற அணிக்கே அவர்கள் சொந்த மண்ணிலேயே அழுத்தத்தை ஏற்படுத்தி தடுமாறச் செய்தது என்று ஷாண்டோவுக்கு இந்தத் தொடர் ஒரு பெரிய தொடர் என்பதோடு, வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் இருப்பார் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு அளித்துள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் முதலில் ஒரு இன்ஸ்பிரேஷனல் லீடர் பாபர் அசாமை ஒதுக்கி விட்டு, ஷான் மசூதை கேப்டனாக்கியது முதல் தவறு. இரண்டாவது பேட்டர்களுக்கு பேட்டிங் டெக்னிக் பற்றிய அக்கறை எதுவும் இல்லாதது.

அமீர் சொஹைல் கூறியது போல், வேகப்பந்து வீச்சாளராயினும், ஸ்பின்னராயினும் சொல்லித்தரப்படும் முதல் அரிச்சுவடியே, பேட்ஸ்மேனை முன்னால் வர வைக்க வேண்டும் என்பதே. ஏனெனில் முன்னால் வர வைப்பதன் மூலம் தான் எல்.பி.யோ, எட்ஜோ செய்ய முடியும் என்பது பயிற்சியின் முதல்படி. ஆனால் பாகிஸ்தான் பேட்டர்கள், பவுலர்களுக்கு அந்த வேலையையே வைப்பதில்லை. இவர்களே முன்காலை முன்னால் தூக்கிப் போட்டு தங்கள் இயக்கங்களுக்குத் தடையும் பூட்டும் போட்டுக் கொள்கின்றனர், அதனால்தான் ஷார்ட் ஆஃப் லெந்த்தில் குத்தி வெளியே ஸ்விங் ஆகும் பந்துகளின் மீது மட்டையைத் தொங்க விட்டு எட்ஜ் செய்து ஆட்டம் இழக்கின்றனர். டெக்னிக் என்ற சொல்லையும் செயலையும் பேட்டர்கள் மறந்து விட்டனர். இது டி20-யின் தாக்கத்தினால்.

மிக முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்கள் வேகத்தைக் குறைத்து விட்டனர். பாகிஸ்தான் என்றாலே வேகப்பந்து வீச்சு தான் பேசப்படும். ஆனால் இப்போதுள்ள பவுலர்களிடம் கட்டுக்கோப்பும் இல்லை. ஸ்விங்கும் இல்லை, வேகமும் இல்லை. குர்ரம் நன்றாக வீசுகிறார். ஆனால் திடீரென ஷார்ட் பிட்ச் ஆக வீசி வங்கதேச அணியை எழும்பச் செய்கிறார். நல்ல உத்வேகமாக கேப்டன் இல்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் சிஸ்டமும் சரியில்லாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டெழ இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x