Published : 02 Sep 2024 06:04 PM
Last Updated : 02 Sep 2024 06:04 PM

இந்தியாவுக்கு 2-வது தங்கம்: பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டனில் நிதேஷ் குமார் அசத்தல்!

பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் பேட்மிண்டனின் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

பாரிஸ்: பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் பேட்மிண்டனின் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது தங்கப் பதக்கம் இது.

பாராலிம்பிக் ஆடவர் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் திங்கள்கிழமை பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்ட இந்திய வீரர் நிதேஷ் குமார் 21-14, 18-21, 23-21 என்ற செட்களில் வென்று தங்கத்தை வசப்படுத்தினார். முதல் செட்டில் மிகச் சிறப்பாக விளையாடி கைப்பற்றியவர், இரண்டாவது செட்டில் சற்றே பின்னடைவை சந்தித்தார். அதன்பின், மூன்றாவது செட்டில் மீண்டெழுந்து இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றார்.

பாரிஸ் பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட 9 பதக்கங்கள் வசமாகியுள்ளது. முன்னதாக, பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாராலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனையான காஞ்சிபுரத்தின் துளசிமதி களம் காண்கிறார். அவருக்கு வெள்ளிப் பதக்கம் ஏற்கெனவே உறுதியான நிலையில், தங்கம் வெல்வரா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இவர் பங்கேற்கும் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

பிரதமர் மோடி வாழ்த்து: இதனிடையே, பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டாவது பதக்கம் வென்ற தடகள வீராங்கனை பிரீத்தி பாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 23 வயதான இவர், மகளிர் 200 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் டிராக் மற்றும் ஃபீல்ட் தடகள வீராங்கனை என்ற பெருமையைப் படைத்தார்.

“பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் அதே 2024 பாராலிம்பிக் #Paralympics2024 பதிப்பில் தனது இரண்டாவது பதக்கத்தை வென்று ப்ரீத்தி பால் வரலாற்று சாதனை படைத்துள்ளார்! அவர் இந்திய மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது. #Cheer4Bharat” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், 2024 பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலின் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். “2024 பாராலிம்பிக் போட்டியில் #Paralympics2024 ஆண்களுக்கான உயரம் தாண்டுதலின் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு @nishad_hj நல்வாழ்த்துகள். ஆர்வமும், உறுதியும் இருந்தால் அனைத்தும் சாத்தியமே என்பதை அவர் நமக்குக் காட்டியுள்ளார். இந்தியா மகிழ்ச்சியில் திளைக்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x