Published : 02 Sep 2024 05:22 PM
Last Updated : 02 Sep 2024 05:22 PM
காஞ்சிபுரம்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸிஸ் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கணை ஒருவரை எதிர்த்து, இந்திய வீராங்கனையான காஞ்சிபுரத்தின் துளசிமதி மோதுகிறார். அவருக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியான நிலையில், அவர் தங்கம் வெல்வரா என்று காஞ்சிபுரம் பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி (24). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். கை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவர் பேட்மிண்டன் போட்டியில் ஆர்வம் கொண்டவர். தன் வீட்டுக்கு அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிறுவயதில் இருந்தே இவருக்கு இவரது தந்தையே பயிற்சி அளித்தார். அரசு சார்பிலும் இவருக்கு விடுமுறை அளித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில், இவர் ஆசிய அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் பிரிவில் வெற்றி பெற்றார். அத்துடன் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்றுள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றார். இவர் அனைத்து நிலைகளிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால் இவருக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
இவர் பங்கேற்கும் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 2-ம் தேதி) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில், சீனாவின் யங் என்ற வீராங்கனையுடன் மோதுகிறார் துளசிமதி. யங் இதுவரை யாரிடமும் தோல்வியைச் சந்திக்காதவர். ஆசிய அளவிலான போட்டியில் ஒரு முறை மட்டும் காஞ்சிபுரம் துளசிமதியிடம் தோல்வி அடைந்துள்ளார். அந்த நம்பிக்கையில் யங்கை எதிர்கொள்கிறார் துளசிமதி. துளசிமதிக்கு வெள்ளிப் பத்க்கம் உறுதியான நிலையில் அவர் தங்கம் வெல்வாரா என்று காஞ்சிபுரம் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
இது குறித்து துளசிமதியின் தந்தை முருகேசன் கூறுகையில், “துளசிமதி சிறுவயதில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். அவர் மாற்றுத்திறனாளியாக இருந்தும் அவருக்கு பயிற்சி அளித்தேன். பலர் இது வேண்டாத வேலை என்றே எங்களிடம் தெரிவித்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி அவருக்கு பயிற்சி அளித்தேன். அவருக்கு வெள்ளிப் பத்ககம் உறுதியான நிலையில் இறுதிப் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. காஞ்சிபுரம் மக்களைப் போல் நானும் அவரது இறுதிப் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வார் என்று ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT