Published : 02 Sep 2024 01:55 PM
Last Updated : 02 Sep 2024 01:55 PM

“தோனியை நான் மன்னிக்க மாட்டேன்” - யுவராஜ் சிங்கின் தந்தை காட்டம்

சென்னை: இந்திய கிரிக்கெட்டின் ஆல்-டைம் ஆகச்சிறந்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர்கள் தோனியும், யுவராஜ் சிங்கும் தவிர்க்க முடியாதவர்கள். இந்த சூழலில் தோனியை மன்னிக்கவே மாட்டேன் என யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இருவரும் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மகத்தான சாதனை தருணங்களை படைத்துள்ளார். கடந்த 2007-ல் டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை ஒரே ஓவரில் விளாசிய போது மறுமுனையில் இருந்தவர் தோனி. 2011-ல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி வின்னிங் ஷாட் அடித்த போது எதிரே இருந்தவர் யுவராஜ்.

ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 67 போட்டிகளில் இந்த பார்ட்னர்ஷிப் இணைந்து எடுத்த ரன்கள் 3,105. சராசரி 51.75. 10 சதங்கள் மற்றும் 13 அரைசதங்களை இருவரும் இணைந்து எடுத்துள்ளனர். முக்கியமாக இருவரும் ஆரம்ப கால கிரிக்கெட் கேரியரில் எதிரெதிர் அணிகளில் விளையாடி உள்ளனர். இந்த ரெஃபரன்ஸ் தோனியின் சுயசரிதை படத்தில் கூட ஒரு காட்சியாக இடம்பெற்றிருக்கும்.

இருந்தபோதும் அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் கருத்து முரண் அவ்வப்போது சர்ச்சையாகும். யுவராஜ் அது குறித்து வெளிப்படையாக பேசிய தருணங்களும் கடந்த காலங்களில் உண்டு. அதை வாசிக்க: >>”நான் தான் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். சேப்பல் தலையீடு காரணமாக தோனி நியமிக்கப்பட்டார்”

யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், இதற்கு முன்பு பலமுறை தோனியை விமர்சித்துள்ளார். இப்போது மீண்டும் ஒருமுறை தோனியை அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவர் தெரிவித்தது: “என் வாழ்நாளில் ஒருபோதும் தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், எனது மகனுக்கு எதிராக அவர் செய்த அனைத்தும் இப்போது வெளிவருகிறது.

என்னிடம் தவறு செய்தவர்களை நான் மன்னிக்க மாட்டேன். அது குடும்பத்தினர், நண்பர்கள் என யாராக இருந்தாலும் இது பொருந்தும். எப்படியும் நான்கு முதல் ஐந்து ஆண்டு காலம் வரை எனது மகன் யுவராஜ் விளையாடி இருப்பார். ஆனால், என் மகனின் விளையாட்டு கேரியரை அவர் பாழாக்கினார். புற்றுநோயுடன் விளையாடி 2011 உலகக் கோப்பை வென்று கொடுத்த அவருக்கு இந்தியா பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என கூறியுள்ளார். இதில் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவையும் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x