Published : 02 Sep 2024 08:54 AM
Last Updated : 02 Sep 2024 08:54 AM
பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரில் தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ப்ரீத்தி பால் நேற்று (செப்.1) நடந்த மகளிருக்கான 200 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்று மேலுமொரு சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆக.30 அன்று நடந்த மகளிருக்கான 100 மீட்டர் (T35 பிரிவு) 23 வயதான ப்ரீத்தி பால் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இப்போது 200 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் 2-வது வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார். ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் 200 மீட்டர் தூரத்தை 30.01 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். தங்க பதக்கத்தை சீன வீராங்கனை வென்றிருந்தார். மகளிர் 200 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
T35 பிரிவு என்றால் என்ன? - பாராலிம்பிக்ஸின் ஓட்டப்பந்தயத்தில் T35 பிரிவு ஹைபர்டோனியா, அட்டாக்ஸியா, பெருமூளை வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவின் நிஷாத் குமார் ஆண்கள் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இத்துடன் நடப்பு பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 27 வது இடத்தில் உள்ளது. 71 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 43 பதக்கங்களுடன் பிரிட்டன் 2வது இடத்திலும், 27 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT