Published : 16 Jun 2018 09:57 PM
Last Updated : 16 Jun 2018 09:57 PM

மெஸ்ஸி நழுவ விட்ட பெனால்டி வாய்ப்பு: பரபரப்பான ஆட்டத்தில் அர்ஜெண்டினாவுடன் ட்ரா செய்து அதிர்ச்சியளித்த ஐஸ்லாந்து

ரஷ்ய உலகக்கோப்பையில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா அணியின் முதல் போட்டியில் உலக நாயகன், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 64வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை நேராக் கோல் கீப்பர் கையில் அடிக்க, ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டம் 1-1 என்று ட்ரா ஆனது. நாளை ஐஸ்லாந்தின் சுதந்திர தினம், இந்நிலையில் உலகின் பெரிய அணியை உலகின் சிறிய அணி ட்ரா என்று பிடித்து நிறுத்தியுள்ளது.

தங்கள் முதல் உலகக்கோப்பை போட்டியில் மிகப்பெரிய அணிக்கு எதிராக 1-1 ட்ரா, கோல் கீப்பர் ஹால்டர்சன் மெஸ்ஸியின் பெனால்டி ஷாட்டைத் தடுத்து நிறுத்தியது அவரது பேரப்பிள்ளைகள் காலக்கட்டம் வரைக்கும் பேசும்.

இது அர்ஜெண்டினா, மெஸ்ஸி ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இன்னொரு நட்சத்திரமான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அற்புதமான ஆட்டத்தினால் ஸ்பெயின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்து வந்து ஹாட்ரிக்குடன் 3-3 என்று ட்ரா செய்ய இன்றோ இன்னொரு உலக நாயகன் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டது, ஏற்கெனவே சமூகவலைத்தளங்களில் மெஸ்ஸியா, ரொனால்டோவா யார் சிறந்த வீரர்? என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சர்ச்சைக்குரிய நடுவரின் முடிவுகள்:

ஆனால் நடுவர்கள் தீர்ப்பு பல இடங்களில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது, பெனால்டி பகுதியில் ஐஸ்லாந்து வீரர் ஒருவர் கையில் பந்தை வாங்கியதற்கு அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி கிக் கொடுத்திருக்க வேண்டும், கொடுக்கவில்லை அதே போல் 77வது நிமிடத்தில் கிர்ஸ்டியன் பேவோன் பெனால்டி பகுதியில் நிச்சயமாக ஃபவுலுக்கு ஆளானார். ஐஸ்லாந்து வீரர் பிர்கிர்மார் செவர்சன் அவரை கீழே தள்ளினார், ஆனால் பெனால்டி கொடுக்கப்படவில்லை. விஏஆர் என்று அழைக்கப்படும் வீடியோ உதவி வசதி இருந்தும் ரெப்ரீ அதனைப் பயன்படுத்தவில்லை. கடைசியிலும் சிலபல கால்தட்டுக்கள் நடுவர்களால் சரியான முறையில் தண்டிக்கப்படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது, ஆனால் எதுஎப்படியானாலும் பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டது ‘கிரிமினல்’ என்பதாகவே உலக அரங்கில் பார்க்கப்படும் என்பது திண்ணம்.

நீண்ட காலத்துக்குப் பேசுபொருளாகும் அந்த 64வது நிமிடம்:

இரு அணிகளும் 1-1 என்று கடும் போட்டியுடனும் சவாலுடன் ஆடி சமனிலை வகித்த தருணத்தில் ஆகாயமார்க்கமாக வந்த லாங் பால் ஒன்று ஐஸ்லாந்து கோல் பாக்சுக்குள் அனுப்பப்பட்டது, அங்கு அகுயேரோ பந்தைப் பார்த்தபடியே பெனால்ட்டி பகுதிக்குள் வேகமாக முன்னேற ஐஸ்லாந்து வீரர் மேக்னுஸனுடன் மோதல் ஏற்பட்டு கீழே விழுந்தார், மேக்னூசன் அவரை கீழே தள்ளியதாகவே தெரிந்தது.

இதனையடுத்து அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி வழங்கப்பட்டது, அர்ஜெண்டின ரசிகர்கள் பிரார்த்தனையை உற்சாகமாகத் தொடங்கினர், ஐஸ்லாந்து ரசிகர்கள் தலையில் கையைவைத்துக் கொண்டு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க தயாராகினர்.

மெஸ்ஸி பெனால்டி கிக்கை எடுப்பதற்கு முன் ரசிகர்களுக்கு டென்ஷன் தலைதூக்கியது, மெஸ்ஸி அடித்தார், தனக்கு இடது புறமும் கோல் கீப்பருக்கு வலது புறமும் அடித்தார், ஷாட்டில் தாக்கத் இல்லை. உயரமும் இல்லை, பந்தைத் தடுத்துவிடக்கூடிய உயரத்தில் மெஸ்ஸி அடிக்க தன் வலப்புறம் டைவ் அடித்த ஐஸ்லாந்து கோல்கீப்பர் ஹால்டர்சன் பந்தை அற்புதமாகத் தள்ளி விட்டார். அதன் பிறகும் கூட கோல் அடித்திருக்கலாம் ஐஸ்லாந்து அதற்கும் தயாராகவே இருக்க அர்ஜெண்டினா தயாராக இல்லை, அதிர்ச்சியிலிருந்தே மீளவில்லை.

ஆனால் ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹால்டர்சன், மெஸ்ஸி ஷாட்டை எப்படியோ கணித்து வலது புறமாக டைவ் அடித்ததும் பாராட்டுக்குரியது, மெஸ்ஸியின் மேல் உள்ள தவறு பந்தை இந்த உயரத்தில் அடித்ததே.

தொடக்கத்திலிருந்தே பயந்து பயந்து, தயங்கித் தயங்கி ஆடிய அர்ஜெண்டினா:

முதலிலிருந்தே பந்தை ஆவேசமாக எடுத்துச் செல்லாமல் தயங்கித் தயங்கி தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகவே முன்னேறியது அர்ஜெண்டினா. இப்படியேதான் 18 நிமிடங்கள் ஆடியது அர்ஜெண்டினா. 19வது நிமிடத்தில் 12 அடியிலிருந்து செர்ஜியோ அகுயெரோ அபாரமாக ஒரு கோலை அடிக்க அர்ஜெண்டினா 1-0 என்று முன்னிலை பெற்றது.

ஆனாலும் அர்ஜெண்டினாவின் தயக்கம், அச்சம் 1 கோல் அடித்த பிறகும் குறையாததால் 23வது நிமிடத்தில் அர்ஜெண்டினா கோல் எல்லைக்குள் புகுந்த ஐஸ்லாந்து முன்கள வீரர்களில் கில்ஃபி சிகுர்ட்சன் தாழ்வாக ஒரு கிராஸ் செய்ய அதனை அர்ஜெண்டினாவின் கோல் கீப்பர் கபலெரோ கையால் தட்டி விட்டார், ஆனால் அவர் சரியாகத் தட்டிவிடவில்லை, சரியாகத் தடுக்கவில்லை இதனால் பந்து நேராக இன்னொரு ஐஸ்லாந்து வீரர் ஃபின்போகசனிடம் வந்தது அவர் 6 அடியிலிருந்து அமைதியாக பந்தை வலைக்குள் திணித்தார் ஆட்டம் 1-1 என்று சமன்.

அர்ஜெண்டினா அதிர்ந்தது, அதன் பயம், தயக்கம் உண்மையானது, அதாவது தயக்கத்தினால்தான் அர்ஜெண்டினா ஐஸ்லாந்துடன் ட்ரா செய்தது. ஐஸ்லாந்தின் இந்தக் கோலுக்கு முன்னதாக மெஸ்சி ஐஸ்லாந்து தடுப்பாட்ட வீரருடன் ஒத்தைக்கு ஒத்தை ஆடி 25 அடியிலிருந்து ஷாட்டை கோலை நோக்கி அடித்தார். ஆனால் ஹால்டர்சன் டைவ் அடித்து தடுத்துவிட்டார்.

அர்ஜெண்டினா அணி பந்துடைமையை தங்கள் பக்கம் அதிகம் வைத்திருந்தது, ஐஸ்லாந்து கோலுக்குப் பிறகே ஆக்ரோஷம் காட்டத் தவறினாலும் கடைசியில் கடும் ஆக்ரோஷம் காட்டியது, ஆனாலும் பயனில்லை. எளிதில் வென்றிருக்க வேண்டிய போட்டியை அணுகுமுறையினால் ட்ரா செய்தது.

இடைவேளைக்கு முன்னதாக மெஸ்ஸியை ஐஸ்லாந்து நன்றாகவே சமாளித்தனர். மெஸ்ஸியின் முதல் ஷாட் 25 அடியிலிருந்து கோல் கீப்பரால் தடுக்கப்பட மறுமுனையில் லாங் பாஸ் ஒன்று ஐஸ்லாந்தின் பின்போகேசனிடம் வர அதனை அவர் பாருக்கு மேல் அடித்தார். பிறகு அர்ஜெண்டின தடுப்பு வீர்ர்கள் சொதப்ப கோல் அருகில் வந்த ஐஸ்லாந்து வீரர் கோல் கீப்பருடன் ஒத்தைக்கு ஒத்தை என்ற நிலையில் பிகிர் பிஜார்னசன் கோல் போஸ்ட்டுக்கு வெளியே அடித்தார், இது சுலபமாக ஐஸ்லாந்துக்கு 2வது முன்னிலை கோலாகியிருக்கும். ஆனால் வாய்ப்ப்பு நழுவவிடப்பட்டது.

 

1-1 என்று சமநிலை ஆனவுடனேயே ஐஸ்லாந்து செட்டில் ஆனது, ஆனால் அர்ஜெண்டினா ஆட்டத்தில் போதிய அவசரம் இல்லை. அவர்களுக்கு ஷாட் ஆட கோலுக்குள் செலுத்த போதிய இடமும் நேரமும் மறுக்கப்பட்டன. ரக்னார் சிகுர்ட்சன் கையில் பந்து பட்டது என்று பெனால்டி கேட்கப்பட்டது ஆனால் அது வேண்டுமென்றே கையால் தடுக்கப்பட்டதல்ல என்று முடிவெடுக்கப்பட்டது போலும். அர்ஜெண்டின பயிற்சியாளர் சாம்போலி கடும் டென்ஷனானார்.

இடைவேளைக்குப் பிறகு ஐஸ்லாந்து தங்கள் பகுதியில் வலுவாக, நடுக்களத்தில் அர்ஜெண்டினா நடுக்களத்தில் பெரிதாகத் தெரிந்தது. மெஸ்ஸி விளிம்புக்குத் தள்ளப்பட்டார். மெஸ்ஸியை ஐஸ்லாந்து நடுக்கள வீரர்களும் தடுப்பாட்ட வீரர்களும் அபாரமாகவே எதிர்கொண்டனர். ஏஞ்செல் டி மரியா சோபிக்கவில்லை, வலது புறத்தில் எட்வர்டோ சால்வியோவும் சில வேளைகளில் பளிச்சிட்டாரே தவிர அச்சுறுத்தலாக இல்லை.

53 நிமிடங்கள் பொறுமை காத்த அர்ஜெண்டினா பயிற்சியாளர் சாம்போலி லூகாஸ் பிக்லியாவுக்குப் பதில் எவர் பனேகாவை களமிறக்கினார். பனேகா மிக அருமையான மிட்ஃபீல்டர், ஆனால் ஐஸ்லாந்து இவர் போகுமிடமெல்லாம் இருவரை அனுப்பி தடுத்தாட்கொண்டனர். நிறைய வாய்ப்புகள் வந்தன, ஆனால் ஷாட்கள் கோல் வலைக்குப் பக்கத்தில் சென்றதே தவிர கோலுக்குள் செல்லவில்லை.

ஆட்டம் முடியும் தறுவாயில் அர்ஜெண்டினா அணி ஒரு கோல் அடிக்க தண்ணி குடித்து முயற்சித்தது, ஆனால் ஐஸ்லாந்து கூலாக இருந்து தடுத்தாட்கொண்டது. கடைசியில் கூட மெஸ்ஸி ஷாட் ஒன்று கோல் வலைக்கு வெகு அருகில் சென்றது. ஆட்டம் முடியும் தறுவாயில் மெஸ்ஸியை ஐஸ்லாந்து வீரர் ஃபவுல் செய்ய 25 அடி ப்ரீ கிக் கிடைத்தது. ஆனால் அது வீரர்கள் சுவரைத் தாண்டவில்லை. தங்கள் முதல் உலகக்கோப்பை போட்டியில் அர்ஜெண்டினாவுடன் ட்ரா செய்தது ஐஸ்லாந்து, இது வெற்றியை விடவும் பெரிதாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x