Published : 08 Jun 2018 03:27 PM
Last Updated : 08 Jun 2018 03:27 PM
டேராடூனில் நடைபெற்ற 3வது டி20 போட்டியிலும் வங்கதேசம், ஆப்கான் அணியிடம் தோல்வி அடைந்து தொடரை முற்றிலும் இழந்து 3-0 என்று ஒயிட்வாஷ் தோல்வியடைந்தது.
முதலில் பேட் செய்த ஆப்கான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய வங்கதேச 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி தழுவியது.
8 ரன்களை கடைசி ஓவரில் தடுத்த ரஷீத் கானும், ஷபிகுல்லாவின் கடைசி பந்து அற்புத பீல்டிங்கும்
டி20 ஸ்பின் மன்னன் ரஷீத் கான் கடைசி ஓவரை வீச வங்கதேச வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலை. முஷ்பிகுர் ரஹிம் 46 ரன்களில் க்ரீசில் நிற்கிறார். அவருடன் மஹமுதுல்லாவும் இருக்கிறார், 8 ரன்கள் என்பது ஒன்றுமில்லை, ஆனால் அங்குதான் சுழல் மன்னன் ரஷீத் கான் தன் வேலையைக் காட்டினார். மிடில் ஸ்டம்பில் ஒரு புல் பந்தை வீச முஷ்பிகுர் முதல் பந்தையே ஸ்லாக் ஸ்வீப்பில் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த 4பந்துகளில் ரஷீத் கானை பவுண்டரி அடிக்க முடியவில்லை அவர் 4 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.
இதனையடுத்து கடைசி பந்தில் 4 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற பரபரப்பான கட்டத்தை ஆட்டம் எட்டியது. கடைசி பந்தை ரஷீத் கான், ஆரிபுல் ஹக்கிற்கு வீசினார். ஷார்ட் பிட்ச் பந்தை ஆர்புல் லாங் ஆனில் தூக்கி அடித்தார். பந்து பவுண்டரிக்கு மேல் சென்று வங்கதேசத்துக்கு ஒரு ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்று நினைத்த தருணத்தில் ஷபிக் உல்லா எம்பினார். கேட்ச் எடுக்க முயன்றார் ஆனால் பந்தை களத்துக்குள் தட்டி விட்டார்.
பந்து விக்கெட் கீப்பர் ஷஜாத்திடம் எப்படியோ வந்து சேர மஹ்முதுல்லா 3வது ரன் எடுக்க முனைகையில் ரன் அவுட் ஆனார். 3வது நடுவர் ஷபிக் உல்லா பந்தை தட்டி விட்ட போது எல்லைக் கோட்டைக் கடந்தாரா இல்லையா என்பது சரிபார்க்கப்பட்டது. ஒரு இஞ்ச்தான் வித்தியாசம், அபாரமான முயற்சி, வெற்றி முயற்சியானது. 3வது ரன்னை மஹ்முதுல்லா வெற்றிகரமாக ஓடியிருந்தால் ஆட்டம் டை ஆகியிருக்கும். ஷஜாத் ரன் அவுட் செய்து நாகின் டான்ஸ் ஆடினார். 3-0 ஒயிட்வாஷ் வரலாறு படைத்தது ஆப்கான்.
கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஷீத் கடைசி ஓவரை வீசுவார் என்பதால் 19வது ஓவரில் நிறைய ரன்களை அடித்தால்தான் வாய்ப்பு. மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் வங்கதேசத்தின் ஒரே கூட்டணியை அமைத்தனர். 19வது ஓவரை கரிம் ஜனாத் வீச முஷ்பிகுர் ரஹிம் பாயிண்ட், மிட்விக்கெட், லாங் ஆன் என்று 4 தொடர் பவுண்டரிகளை விளாசினார். பிறகு ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி அடிக்க 21 ரன்கள் அந்த ஓவரில் வந்தது, கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி, 8 ரன்கள் எடுத்தால் ட்ரா. அப்போதுதான் ரஷீத் கான் அந்த அற்புத ஓவரை வீச, கடைசி பந்தில் அபாரமான பீல்டிங் தகைய வங்கதேசம் டி20 ஒயிட் வாஷ் தோல்வியடைந்தது.
சரியாகத் தொடங்காத விரட்டல்:
வங்கதேசதின் விரட்டல் சரியாகத் தொடங்கவில்லை. தமிம் இக்பால் 5 ரன்களில் முஜீப் உர் ரஹ்மானிடம் வீழ்ந்தார். சவுமியா சர்க்கார், முஜீப் உர் ரஹ்மானை பேட்டை இன்னொரு கையில் மாற்றிக் கொண்டு சுவிட்ச் ஹிட் சிக்ஸ் அடித்தார். ஆனால் இவரும் லிட்டன் தாஸும் அடுத்தடுத்து ஒரே மாதிரி ரன் அவுட் ஆகினர். ஷார்ட் பைன் லெக்கில் மொகமது நபியின் கைத்திறனை சோதித்து ரன் அவுட் ஆகினர். ஷாகிப் அல் ஹசன் 10 ரன்களில் ஒரு சிக்ஸ் அடித்திருந்தார், ஆனால் ஷபியுல்லா ஷென்வாரியின் அபார கேட்சுக்கு கரீம் ஜனாத்திடம் வெளியேற 53/4. அதன் பிறகுதான் முஷ்பிகுர் ரஹிம் (46), மஹ்முதுல்லா (45) ஆகியோர் இணைந்து 84 ரன்களைச் சேர்த்தனர். 17வது ஓவரில் அஷ்டாப் ஆலமை ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாசினார் மஹ்முதுல்லா, ஆனால் ரஷீத் கான் தன் ஓவரில் 3 ரன்களையே கொடுக்க கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் என்று கடினமானது, கடைசியில் முஷ்பிகுர் 5 பவுண்டரிகளை அடித்தும் கடைசி ரஷீத் ஓவரில் முதல் பந்தில் வெளியேற கடைசியில் அபார பீல்டிங்கில் ஆப்கான் 1 ரன்னில் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் கொடுத்தது.
ஆப்கான் பேட்டிங்:
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கான் அணி அதிரடி தொடக்கம் கண்டது, ஷஜாத், மெஹதி ஹசன் மிராஸ் ஓவரில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசினார். 26 ரன்கள் எடுத்த நிலையில் நஜ்முல் பந்தை ரிவர் ஸ்வீப் செய்த போது கிளவ்வில் பட்டதற்கு தவறாக எல்பி தீர்ப்பளிக்கப்பட்டு வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கனி 19 ரன்களுக்கு வெளியேறினார்.
கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் 3 சிக்சர்களுடன் 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து பகுதி நேர பவுலர் ஆர்புல்லிடம் அவுட் ஆனார். சமியுல்லா ஷென்வாரி அதிகபட்சமாக ஆப்கன் அணியில் 28 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். ஷாகிப் மற்றும் நஜ்முல் கடைசி 2 ஓவர்களில் 10 ரன்களையே கொடுத்ததால் ஆப்கான் 150க்கும் கீழ் குறைந்தது. ஆட்ட நாயகன் முஷ்பிகுர் ரஹிம், தொடர் நாயகன் ரஷீத் கான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT