Published : 29 Aug 2024 07:57 AM
Last Updated : 29 Aug 2024 07:57 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது மே.இ.தீவுகள் அணி

டிரினிடாட்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரானகடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

டிரினிடாட்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 13 ஓவர்களாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசினார். ரியான் ரிக்கெல்டன் 27, கேப்டன் எய்டன் மார்க்ரம் 20 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ரொமரியோ ஷெப்பர்டு 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

116 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது 9.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் 13 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் விளாசினார். ஷாய் ஹோப் 24 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 42 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மயர் 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்திலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x