Published : 28 Aug 2024 08:18 PM
Last Updated : 28 Aug 2024 08:18 PM

‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ - கடும் காயத்தில் இருந்து மீண்டெழுந்த பவுலர் ஷிவம் மாவி

ஷிவம் மாவி (கோப்புப் படம்)

புது டெல்லி: அடுத்த பும்ராவாக முன்னேறி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட 25 வயதாகும் வேகப் பந்துவீச்சாளர் ஷிவம் மாவி துரதிருஷ்டவசமாக காயங்களில் சிக்கிக் கொண்டார். நான்கு ஸ்ட்ரெஸ் ஃபிராக்ச்சர்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வந்தாலும், காயத்துக்கு அஞ்சி வேகத்தில் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “பெரிய காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சிறிய காயங்களை நான் எண்ணுவதில்லை. என் முதுகில் 4 அழுத்த எலும்பு முறிவு (four stress fracture) ஏற்பட்டது. எனக்கு வயது 25 தான் ஆகிறது. அதற்குள் முழங்காலில் இரண்டாம் கிரேடு காயத்தினால் அவதியுற்றேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது பந்து வீசத் தொடங்கியுள்ளேன். ஐபிஎல் தொடரில் காயங்கள் மீண்டும் தலைதூக்கிய போது என் சிகிச்சை தாமதமடைந்தது. ஸ்ட்ரெஸ் ஃப்ராக்சர் ஏற்பட்ட அந்த இடத்திற்கு அருகில் முதுகெலும்பில் இந்த முறை காயம் ஏற்பட்டது. அது சரியாகக் குணமாகாமல் நான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியில் இருந்த போது மீண்டும் ஏற்பட்டது.

இப்போது நான் உடல் தகுதி பெற்று விட்டேன் என்பதோடு மிக நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன். என்னுடைய பந்து வீச்சு ரிதம் திரும்பக் கிடைக்க பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். இனி வரும் அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவேன் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. காயம் என்னை முடக்க அனுமதிக்க மாட்டேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓடி வந்து பந்து வீசுவது அவ்வளவே. நீங்கள் இதை பற்றுறுதி என்று நினைத்தாலும், லவ் என்று நினைத்தாலும் சரி, எனக்கு பவுலிங் தவிர வேறொன்றும் தெரியாது.

25 வயதில் நான் வீழ்வேன் என்று நினைக்க முடியுமா? இந்திய அணியில் 3 வடிவங்களிலும் ஆடுவேன் என்ற தீரா அவா என்னிடத்தில் உள்ளது. வீழ்வேன், எழுவேன் வீழும் ஒவ்வொரு முறையும் எழுவேன். என்னுடைய யு-19 சகாக்கள் ஷுப்மன் கில், அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா, ரியான் பராக், இந்திய அணிக்காக ஆடுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அவர்கள் நன்றாகச் செயல்படுவது எனக்கும் உத்வேகம்தான்.

என் நண்பன் கமலேஷ் நாகர்கோட்டியும் நீண்ட காலமாக ஆடவில்லை. அவரும் இப்போது உள்நாட்டுத் தொடரில் ஆடுவார். கிரிக்கெட் மீதான தீராத அவா எங்கள் இருவரிடத்திலும் குறையவே இல்லை. காயத்துக்குப் பிறகு பந்து வீச்சாளனின் பெரிய பிரச்சனை ரன் அப் தான். மீண்டும் வரும்போது இதுதான் பெரிய கஷ்டம். நிறைய காயங்களுக்குப் பிறகுதான் என் உடலை நான் புரிந்து கொண்டுள்ளேன்.

காயத்தினால் வேகத்தில் சமரசம் கிடையாது. 140 கிமீ வேகத்திற்குக் கீழ் வீசினால் பேட்டர்களுக்கு எளிதாகிவிடும். நான் பும்ராவிடம் ஷமியிடமும் பேசினேன். அவர்களிடம் பேசியதில் நான் கற்றுக் கொண்ட ஒருவிஷயம் காயங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதே. வேகப்பந்து வீச்சு சாதாரணமல்ல, அனைவராலும் வேகப்பந்து வீச்சாளராக முடியாது என்பதே” என்கிறார் ஷிவம் மாவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x