Published : 27 Aug 2024 11:22 AM
Last Updated : 27 Aug 2024 11:22 AM
மீரட்: கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. இந்நிலையில், 15 வீரர்கள் அடங்கிய பிரதான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து கேப்டன் ரோகித் புரிய வைத்ததாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக ரிங்கு சிங் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங், கடந்த 2023-ல் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி அனைவரது கவனத்தையும் பெற்றார். அதன் பின்னர் இந்திய டி20 கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்தார்.
இந்தச் சூழலில் ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் ரிசர்வ் (மாற்று) வீரராக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போதே அதனை பலரும் விமர்சித்திருந்தனர். ஏனெனில், ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஃபினிஷராக ரிங்கு சிங் அறியப்படுகிறார். இந்த நிலையில் அணியில் இடம் பெறாதது குறித்து ரோகித் தன்னிடம் சொன்னதை ரிங்கு சிங் பகிர்ந்துள்ளார்.
“இளம் வயது வீரரான நீங்கள் கடினமாக களத்தில் உழைத்துக் கொண்டே இருங்கள் என கேப்டன் ரோகித் என்னிடம் சொன்னார். அணியில் இடம்பெறாதது குறித்து கவலை கொள்ள வேண்டாம். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. அதனால் ஆட்டத்தில் கவனம் வைக்குமாறு சொன்னார். அவரது அந்த வார்த்தைகள் எனக்கு புரிதலை தந்தது” என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
தற்போது யுபி டி20 லீக் கிரிக்கெட்டில் தொடரில் மீரட் அணியை ரிங்கு சிங் வழிநடத்தி வருகிறார். இதுவரை 23 டி20 போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் விளையாடியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT