Published : 27 Aug 2024 07:34 AM
Last Updated : 27 Aug 2024 07:34 AM

சின்க்ஃபீல்ட் செஸ் தொடர்: டிங் லிரெனுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார் பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

செயின்ட் லூயிஸ்: கிராண்ட் செஸ் டூரில் இந்த ஆண்டுக்கான கடைசி தொடரான சின்க்ஃ பீல்ட் கோப்பை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோதினார். இந்த ஆட்டம் 32-வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது.

மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான மாக்சிம் வாச்சியர்-லாக்ரேவுடன் மோதினார். இந்த ஆட்டம் 72-வது காய் நகர்த்தலின்போது டிராவில் முடிவடைந்தது. ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் பேபியானோ கருனாவுடன் மோதினார். இதில் 25-வது காய் நகர்த்தலின் போது நெபோம்னியாச்சி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

நெதர்லாந்தின் அனிஷ் கிரி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் ஆகியோர் மோதிய ஆட்டமும் பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜா, அமெரிக்காவின் சோ வெஸ்லி ஆகியோர் மோதிய ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. இன்னும் 3 சுற்றுகள் மீதம் உள்ள நிலையில் அலிரேசா ஃபிரோஸ்ஜா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சோ வெஸ்லி 3.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பேபியானோ கருனா 3.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

குகேஷ், பிரக்ஞானந்தா, டிங் லிரென், மாக்சிம் வாச்சியர்-லாக்ரேவ் ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் முறையே 4 முதல் 7 இடங்களில் உள்ளனர். நெபோம்னியாச்சி 2.5 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், நோடிர்பெக் அப்துசட்டோரோவ் 2.5 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், அனிஷ்கிரி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x