Published : 23 Aug 2024 01:08 PM
Last Updated : 23 Aug 2024 01:08 PM
விருதுநகர்: விளையாட்டுத் துறையில் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆர்வமும் கடின உழைப்பும் இருந்தால் இளைஞர்களால் சாதிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 100-வது ‘காபி- வித் கலெக்டர்’ நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 150 மாணவ - மாணவியர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் பேசுகையில்,"இளைஞர்களுடன் கலந்துரையாடும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். விளையாட்டு மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் கிராமப்புற இளைஞர்கள் சாதித்து வருகின்றனர். விருப்பத்தோடும் கடின உழைப்போடும் இலக்கை நோக்கி முயற்சித்தால் சாதனை படைக்க முடியும்.
தான் மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன். விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால், தன் அம்மா கொடுக்கும் உணவுதான் தனக்கு சத்தான உணவு. கூச்சம் தான் நம்மை தடுக்கிறது. கூச்சத்தை விட்டுவிட்டால் எந்த இடத்திலும் சாதிக்க முடியும்” என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறினார்.
முன்னதாக கிரிக்கெட் வீரர் நடராஜன் அளித்த பேட்டியில், “விளையாட்டுத் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் இளைஞர்களுக்கு இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். பிள்ளைகளின் விளையாட்டுக்காக தங்களது நேரத்தை செலவிடுகிறார்கள். விளையாட்டுத் துறையில் இன்று பெண்கள் பலர் சாதிக்கிறார்கள். விளையாட்டுத் துறை சிறப்பாகவும் வேகமாகவும் முன்னேறி வருகிறது.
ஒரு காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாத நிலையில் இருந்து, தற்போது ஏராளமான பதக்கங்களை இந்திய வீரர்கள் பெற்று வருகிறார்கள். எந்தத் துறையாக இருந்தாலும் முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றி பெற முடியும். இந்திய கிரிக்கெட் அணியில் எல்லோருக்கும் வாய்ப்பு உள்ளது.” என்று நடராஜன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT