Published : 23 Aug 2024 08:29 AM
Last Updated : 23 Aug 2024 08:29 AM
சமீபத்தில் முடிவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணியில் அர்ச்சனா காமத் இடம் பெற்றிருந்தார். அவரை உள்ளடக்கிய இந்திய அணி முதன்முறையாக கால் இறுதி சுற்றில் கால்பதித்து சாதனை படைத்திருந்தது. எனினும் அந்தசுற்றில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. கால் இறுதி சுற்றில் மற்ற இந்திய வீராங்கனைகள் தோல்வியை சந்தித்த போதிலும் தனது ஆட்டத்தில் அர்ச்சனா காமத் வெற்றியை வசப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் 24 வயதான அவர், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் அவர், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Public Policy என்ற முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாமல் திரும்பிய அர்ச்சனா காமத், படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், இளம் வீராங்கனையான அர்ச்சனா, டேபிள் டென்னிஸை விட்டு வெளியேறி படிப்பை தொடர முடிவு செய்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வீடு திரும்பிய பிறகு அர்ச்சனா காமத், தனது பயிற்சியாளர் அன்ஷுல் கார்க்குடன் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் குறித்து உரையாடினார். அப்போது அன்ஷுல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது கடினம், தரவரிசையில் 100 இடங்களுக்கு மேல் இருப்பதால் அதிக அளவிலான உழைப்பை கொடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அர்ச்சனா, இனிமேல் படிப்பில் கவனம் செலுத்த உள்ளேன். இதனால் டேபிள் டென்னிஸில் இருந்து வெளியேறுகிறேன் என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அன்ஷுல் அதிர்ச்சி அடைந்தார். எனினும் அர்ச்சனா தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அர்ச்சனா தேர்வு செய்யப்பட்ட போது விவாதங்கள் எழுந்தது. ஏனெனில் அப்போது நம்பர் ஒன் வீராங்கனையான சன் யிங்சாவை தோற்கடித்த அய்ஹிகா முகர்ஜியை தவிர்த்து அர்ச்சனாவை தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்விகள் எழுந்தன. எனினும் அர்ச்சனா விளையாட்டில் கவனம் செலுத்தி தன்னால் முடிந்தவரை சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த முயற்சித்தார். ஆனால் பெரிய அளவில் பிரகாசிக்க முடியாத நிலையில் தற்போது தனது வாழ்க்கை பாதையை படிப்பை நோக்கி மாற்றிக் கொண்டுள்ளார்.
பதின்ம வயதில் தனது டேபிள் டென்னிஸ் வாழ்க்கையை தொடங்கிய அர்ச்சனா, தற்போது அதில் இருந்து விலகிச் செல்ல எடுத்த முடிவு மிகவும் உணர்ச்சிகரமானது. அவர், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் 98.7 மற்றும் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவியாக திகழ்ந்தார்.
இப்போது, அவர் மிச்சிகனில் தனது இரண்டாவது முதுகலை பட்டப்படிப்பைத் தொடர்கிறார். அர்ச்சனா ஏற்கெனவே ‘சர்வதேச உறவுகளில்’ முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். முன்னதாக அவர், பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தார். தற்போது 2-வது முதுகலை பட்டப்படிப்பை நோக்கி பயணித்துள்ள அர்ச்சனா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பி நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறார்.
இதுதொடர்பாக அர்ச்சனா காமத் கூறும்போது, “டேபிள் டென்னிஸைப் போலவே படிப்பதையும் நான் எப்போதும் விரும்பினேன். கடந்த ஆண்டு மிச்சிகனில் இந்த படிப்பை பற்றி நான் விசாரித்தேன். ஆனால் அதன் பின்னர் முதல் முறையாக பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றது. இதனால் விளையாட்டில் கவனம் செலுத்த விரும்பினேன்.
இப்போது ஒலிம்பிக் போட்டி முடிந்துவிட்டதால், நான் மேலும் படிக்க விரும்பினேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பி வந்து மக்களுக்கு வேறு வகையில் சேவை செய்ய விரும்புகிறேன். எனது முடிவுக்கும், வருமானத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தியாவுக்காக விளையாடும்போது எனக்குத் தேவையான அனைத்து ஆதரவும் கிடைத்தது, இது மிகப்பெரிய மரியாதை.
ஒலிம்பிக்கில் ஷரத் கமல், மணிகா பத்ரா போன்ற மூத்த வீரர்களுடன் நேரம் செலவிட்டது சிறப்பான விஷயம். அங்கு சூழல் மிகவும் நன்றாக இருந்தது. நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோரையும் நான் சந்தித்தேன். இது எப்போதும் நினைவில் இருக்கும். நாட்டிற்காக விளையாட்டில் போராடுவதை நேசித்தேன். இனிமேல் அதை நான் மிகவும் இழப்பேன். எனினும் இங்கு (அமெரிக்காவில்) தொடர்ந்து விளையாடுவேன் என்று நம்புகிறேன்” என்றார்.
அர்ச்சனா காமத், பெங்களூரை சேர்ந்தவர். இவரது பெற்றோர்கள் கண் மருத்துவர்கள். அர்ச்சனாவின் சகோதரர் தற்போது அமெரிக்காவில் விண்வெளி பொறியியலில் பி.எச்.டி படித்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...