Published : 22 Aug 2024 11:16 PM
Last Updated : 22 Aug 2024 11:16 PM

2025-ல் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்: டெஸ்ட் கிரிக்கெட் அட்டவணை வெளியீடு

ரோகித் சர்மா மற்றும் பென் ஸ்டோக்ஸ்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2025) இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த நாட்டு அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டன.

கடைசியாக இந்திய அணி கடந்த 2021-ல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. கடைசி போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2022-ல் அந்தப் போட்டி நடைபெற்றது. அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என சமன் ஆனது.

அதன் பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையில் இந்தியாவில் நடைபெற்றது. இதில் 4-1 என தொடரை இந்தியா வென்றது. இந்நிலையில், இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் குறித்த அட்டவணை விவரம் வெளியாகி உள்ளது.

  • முதல் டெஸ்ட்: ஜூன் 20 - ஹெட்டிங்லி, லீட்ஸ்
  • இரண்டாவது டெஸ்ட்: ஜூலை 2 - எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்
  • மூன்றாவது டெஸ்ட்: ஜூலை 10 - லார்ட்ஸ், லண்டன்
  • நான்காவது டெஸ்ட்: ஜூலை 23 - ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
  • ஐந்தாவது டெஸ்ட்: ஜூலை 31 - தி ஓவல், லண்டன்

வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்த போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x