Published : 22 Aug 2024 02:20 PM
Last Updated : 22 Aug 2024 02:20 PM
நடப்பு ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடரை யார் வெல்வார்கள் என்று கணிப்பது மிகமிகக் கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 பார்டர்-கவாஸ்கர் டிராபிகளை இந்தியாதான் வென்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா இந்த முறை பழிக்கு பழி வாங்க திட்டமிட்டு வருகிறது. இந்திய அணியில் மொகமது ஷமி பங்கேற்பதும் கடினமாகியுள்ள சூழ்நிலையிலும் விராட் கோலியின் ஃபார்ம் இன்மையும் ரஹானே போன்ற அனுபவ வீரர்கள் இன்மையும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. 5 டெஸ்ட் போட்டிகள் பெர்த், அடிலெய்ட், பிரிஸ்பன், சிட்னி, மெல்போர்னில் நடைபெறுகிறது. இதில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் பிட்ச்கள் ‘ட்ராப்-இன்’ பிட்ச்கள் என்கிறார் மேத்யூ ஹெய்டன்.
“ஒரு டெஸ்ட் மேட்ச் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறவிருக்கிறது. சூரிய அஸ்தமன நேரத்தில் இங்கு பேட்டிங் மிக மிகக் கடினமாகும். ஆஸ்திரேலியாவின் ஹோம் அட்வாண்டேஜ் என்பது இப்போதெல்லாம் பறிக்கப்பட்டு விட்டது. உள்ளூர் சாதகமெல்லாம் ஆஸ்திரேலியாவுக்கு இப்போது இல்லை. உதாரணமாக அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்டில் அந்தி மாலையில் 130/4 என்று இருந்தால் 150/8 என்று ஆவதுதான் நடக்கும்.
எனவே இயல்பான ஆதிக்கம் செலுத்துவது என்பது இல்லை. மிகவும் வித்தியாசமான கிரிக்கெட் தொடராக இருக்கும். பழைய காலத்து மரபான கிரிக்கெட் பிட்ச்கள் அல்ல இவைகள். மேலும் இரு அணிகளின் வீரர்கள் வரிசையைப் பார்க்கும் போது யாருக்கு வெற்றி வாய்ப்பு, யார் கை ஓங்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ரன்கள்தான் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன். ரன்கள்தான் தீர்மானிக்கும்.
மேலும், ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியிலிருந்து தொடர் தொடங்கி கிழக்குப் பகுதிக்கு நகர்கிறது. இதுவும் தனித்துவமான ஒரு விஷயமே. பொதுவாக கிழக்கிலிருந்து மேற்குக்குச் செல்வோம், இப்போது அப்படி இல்லை, எனவே இந்த தொடர் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். விராட் கோலியும், ஸ்டீவ் ஸ்மித்தும் தங்கள் இறுதிப் பகுதியில் உள்ளனர். ஆகவே இருவரும் ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள். இருவரும் இதனை தங்களுக்கேயுரிய வித்தியாசமான பாணிகளில் செய்வார்கள். இவர்கள்தான் இந்த சம்மரின் முக்கிய வீரர்கள்.
ஜெய்ஸ்வால் அருமையான ஸ்ட்ரோக் பிளேயர், ஆனால் அவருக்கு ஆஸ்திரேலியாவின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கி விடுவார்கள். அவர் பந்து எழும்பி வரும்போது கவர் திசையில் ஆடுவதில் சிறந்து விளங்குகிறார். ஆனால் இங்கு பவுன்சி பிட்ச்களுக்கு அவர் எப்படி அட்ஜஸ்ட் செய்து கொள்வார் என்பதைப் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அவரைப் பார்த்திருக்கிறோம்.
புல் ஷாட்களை அவர் அனாயாசமாக ஆடுகிறார். ஆனால் இவையெல்லாம் ஆஸ்திரேலியாவின் 3 உலகத்தர வேகப்பந்து வீச்சாளர்களிடம் செல்லுபடியாகுமா என்பதைப் பார்க்க வேண்டும். மைதானங்கள் பெரியது. எனவே துல்லியமாக அடித்தால்தான் சிக்ஸ் போகும். இல்லையெனில் முக்கால் மைதானத்தில் கேட்ச் ஆகும். எனவே அட்ஜஸ்ட் செய்ய வேண்டும், ஜெய்ஸ்வால் செய்து கொள்வார் என்றே நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் மேத்யூ ஹெய்டன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT