ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் உணவக பணிக்கு திரும்பிய சீன வீராங்கனை - வைரல்

சீன வீராங்கனை சோ யாக்
சீன வீராங்கனை சோ யாக்
Updated on
1 min read

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன தேச வீராங்கனை சோ யாக், உணவக பணிக்கு திரும்பியுள்ளார். அது உலக அளவில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

18 வயதான அவர் ஜிம்னாஸ்டிக்ஸில் பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் வென்ற பிறகு போடியத்தில் நின்ற அவருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. அப்போது அதே பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற இத்தாலி வீராங்கனைகள் பதக்கத்தை கடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

அதை பார்த்து அழகான ரியாக்‌ஷன் கொடுத்திருந்தார் சோ யாக். தொடர்ந்து அவரும் பதக்கத்தை கடித்து போட்டோவுக்கு உற்சாக போஸ் கொடுத்தார். அந்த வீடியோ காட்சி அப்போது வைரலானது. இந்நிலையில், நாடு திரும்பிய அவர் உணவகம் ஒன்றில் தனது பெற்றோருக்கு உதவியாக பணியாற்றி வருகிறார். அவரின் அந்த செயல் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் பகுதியில் இந்த உணவகம் அமைந்துள்ளது. அங்கு ஒலிம்பிக்கில் தான் பதக்கம் வென்ற அதே ஜெர்சியை அணிந்தபடி வாடிக்கையாளர்களுக்கு அவர் உணவு பரிமாறி வருகிறார். தங்கள் குடும்பத்தின் உணவகத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் அவர் இதனை செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஜிம்னாஸ்டிக்ஸ் பேலன்ஸ் பீமில் மூன்று வயது முதலே பயிற்சி மேற்கொண்டு வருகிறார் சோ யாக். கடந்த 2020-ல் சீன சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்தார். சீனியர் பிரிவில் சீன தேசிய விளையாட்டு மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் சிமோன் பைல்ஸை பின்னுக்கு தள்ளி அவர் பதக்கம் வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in