Published : 18 May 2018 03:50 PM
Last Updated : 18 May 2018 03:50 PM
டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை ஒழிக்க ஐசிசி பரிசீலித்து வருவதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஆசிப் இக்பால் பரிசீலனையில் உள்ள புதிய முறையைச் சாடியுள்ளார்.
அதாவது உள்நாட்டு அணிகள் தங்களுக்குச் சாதகமாக சூழ்நிலைகளை அமைக்க இந்த டாஸ் முறை பெரிதும் உதவுகிறது, இதனால் டெஸ்ட் கிரிக்கெட் ஒருதலைபட்சமாக மாறி, முடிவுகளும் சவாலற்று நிகழ்ந்து டெஸ்ட் போட்டியை அறுவையாக மாற்றி வருகிறது, எனவே வருகை தரும் அணி கேப்டனே முதலில் பேட்டிங்கா, பீல்டிங்கா என்பதை முடிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இது தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஆசிப் இக்பால் சாடிய போது, “இல்லை, டாஸ் முறையை ஒழிப்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. வருகை தரும் அணிகளும் தங்கள் நாடுகளில் தங்களுக்குச் சாதகமாக சூழ்நிலைகளை உருவாக்குபவைகள்தான்.
உலகின் நம்பர் 1 அணி உள்நாடு, அன்னியமான வெளிநாடு சூழல் ஆகிய இரண்டிலும்தான் வெற்றி பெற்று நிரூபிக்க வேண்டும்.
பிற நாடுகளுக்கு செல்லும் போது அன்னியச் சூழ்நிலைகளை தன்மயப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதில்தான் உள்ளது சவால். இதில் டாஸ் என்பது கிரிக்கெட் ஆட்டத்தின் உள்ளார்ந்த ஒரு அங்கம். டாஸ் முறையை ஒழித்துவிட்டால், டாஸ் வெல்லும் கேப்டன் அதற்கேற்ப பேட்டிங்கா பீல்டிங்கா என்பதை முடிவு செய்வதில் உள்ள சவால் இல்லாமல் போய் விடுகிறது, சரியான அணித்தேர்வு, பிட்சைக் கணித்து சரியான முடிவை எடுப்பது தட்ப வெப்ப நிலையைக் கணிப்பது ஆகிய அனைத்து ஐயங்கள் மற்றும் அறிவு தொடர்பான கூறுகளை எடுத்து விட்டால் என்ன ஆவது? டாஸ் முறையில்தான் ஒரு கேப்டனுக்கு இந்தச் சவால் உள்ளது” என்று விளாசியுள்ளார் ஆசிப் இக்பால்.
தொடர்புடைய செய்தி
டாஸ் போடும் முறையை ஒழித்துக் கட்ட ஐசிசி முடிவு? தீவிர பரிசீலனை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT