Published : 17 Aug 2024 06:55 AM
Last Updated : 17 Aug 2024 06:55 AM
சென்னை: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் போது எடை குறைப்புக்காக இந்திய மல்யுத்த வீராங்கனை விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், இறந்துவிடுவாரோ என பயந்ததாக அவருடைய பயிற்சியாளரான ஹங்கேரியைச் சேர்ந்த வோலர் அகோஸ் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்தார். ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட எடை பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், அவரை தகுதி நீக்கம் செய்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் உத்தரவிட்டனர். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு கலைந்தது.
இதை எதிர்த்து வினேஷ் போகத், சர்வதேச விளையாட்டு நடுவர்மன்றத்தில் முறையீடு செய்தார். அதில், தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தனக்கு வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என அவர், கோரியிருந்தார். இதை விசாரித்த நடுவர் மன்றம் வினேஷ் போகத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்காக வினேஷ் போகத்தின் பயிற்சியாளராக செயல்பட்ட ஹங்கேரியைச் சேர்ந்த வோலர் அகோஸ் தனது முகநூலில், வினேஷ் போகத் உடல் எடையை குறைப்பதற்காக செய்த போராட்டங்களை உணர்வுப்பூர்வமாக பதிவிடப்பட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
அரை இறுதிப் போட்டி முடிவடைந்ததும் வினேஷ் போகத்தின் உடல் எடை 2.7 கிலோ அதிகரித்து இருந்தது. ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக அவர், உடற் பயிற்சி மேற்கொண்டார். எனினும் 1.5 கிலோ எடை குறையாமல் இருந்தது. இதன் பின்னர் 50 நிமிடங்கள் நீராவி குளியல் எடுத்துக் கொண்டார். ஆனால் அவரது உடலில் இருந்து ஒரு துளி வியர்வை கூட வெளியேறவில்லை.
வேறு வழியில்லாததால் நள்ளிரவு முதல் அதிகாலை 5.30 மணி வரை வினேஷ் போகத் டிரெட்மில், சைக்கிளிங் மற்றும் மல்யுத்த நகர்வுகளை மேற்கொண்டார். 45 நிமிடங்கள் பயிற்சி அதன் பின்னர் 2 முதல் 3 நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பயிற்சி என தொடர்ந்தார். அப்போது அவர், சரிந்து விழுந்தார். ஆனால் எப்படியோ நாங்கள் அவளை எழுப்பினோம். பின்னர் ஒரு மணி நேரம் நீராவி குளியல் மேற்கொண்டார். இந்த விஷயத்தில் நான் வேண்டுமென்றே நாடகத்தனமான விவரங்களை எழுதவில்லை. ஆனால் வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என்ற அச்சம் எனக்குள் இருந்தது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது.
இரவில் வினேஷ் போகத் மருத்துவமனையில் இருந்து வந்ததும் நாங்கள் சுவாரசியமாக உரையாடினோம். அப்போது வினேஷ் போகத் என்னிடம் கூறும்போது, “நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நான் உலகின் சிறந்த வீராங்கனையை (ஜப்பானின் யுகி சுசாகி) தோற்கடித்து உள்ளேன். நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். உலகின் சிறந்த வீராங்கனைகளில் நானும் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளேன். பதக்கம், பதக்க மேடை எல்லாம் வெறும் பொருட்கள்தான். செயல் திறனை பறிக்க முடியாது” என்று கூறினார்.
இவ்வாறு வோலர் அகோஸ் தனது பதிவில் கூறியுள்ளார். இந்த பதிவை அவர், சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT