Published : 16 Aug 2024 10:27 PM
Last Updated : 16 Aug 2024 10:27 PM

‘காலம் கைகொடுக்கவில்லை, என் விதியும்தான்’ - தகுதி நீக்கம் குறித்து மவுனம் கலைத்த வினேஷ் போகத்

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின்போது, இந்திய பெண்கள் மற்றும் நம் தேசிய கொடியின் புனிதத்தை பாதுகாக்க கடுமையாக போராடினேன். ஆனால் கடந்த ஆண்டு மே 28 அன்று முதல் தேசியக் கொடியுடன் நான் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது அது என்னை பயமுறுத்துகிறது.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயரே பறக்க வைக்க வேண்டும் என்பதும், அதன் மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் அதை என்னுடைய வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது. அப்படி செய்வது, மல்யுத்தத்துக்கு நடந்தவற்றையும், தேசிய கொடிக்கு நடந்தவற்றையும் கண்டிக்கும் விதமாக இருக்கும் என்று நினைத்தேன்.

சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றை சொல்ல வார்த்தைகள் ஒருபோதும் போதுமானதாக இருக்காது. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன். ஆகஸ்ட் 6ம் தேதி இரவும், ஆகஸ்ட் 7ம் தேதி காலையும் நடந்தது குறித்து நான் சொல்ல விரும்பவதெல்லாம் இதுதான். நாங்கள் பின்வாங்கவில்லை. எங்கள் முயற்சிகள் ஒருபோதும் நிற்கவில்லை. நாங்கள் சரணடையவில்லை. ஆனால் கடிகாரம் நின்றுவிட்டது, காலம் கைகொடுக்கவில்லை. என்னுடைய விதியும்தான்.

என்னுடைய அணிக்கும், என் சக இந்தியர்களுக்கும், என்னுடைய குடும்பத்துக்கும்... நாம் உழைத்துக் கொண்டிருந்த, சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஒன்று, நிறைவடையாமல் போய்விட்டதாக உணர்கிறேன். அது இனி எப்போதும் இல்லாமல் போகலாம். விஷயங்கள் எதுவும் இனி முன்பு போல இல்லாமல் போகலாம். ஒருவேளை சூழல்கள் வேறாக இருந்திருந்தால் 2032 வரைக்கும் நான் விளையாடியிருக்கக் கூடும். ஏனென்றால் எனக்குள் இருக்கும் போராட்டமும், மல்யுத்தமும் எப்போதும் அப்படியேதான் இருக்கும்.

எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்பதை என்னால் கணிக்க இயலாது. ஆனால் நான் நம்பும் விஷயத்துக்காக, சரியானவற்றுக்காக நான் தொடர்ந்து எப்போதும் போராடுவேன்” இவ்வாறு வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக நடுவர் மன்றம் தீர்ப்பு அளிக்காமல் காலம் தாழ்த்தியது. இந்த சூழலில் அவரது மனு கடந்த 14-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் 15 நாட்கள் காலத்துக்குள் மீண்டும் மனு தாக்கல் செய்யப்படும் என வினேஷ் போகத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x