Published : 16 Aug 2024 07:44 AM
Last Updated : 16 Aug 2024 07:44 AM

2036-ல் ஒலிம்பிக்கை நடத்துவது இந்தியாவின் கனவு: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுடெல்லி: நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2023-ம் ஆண்டில் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜி-20 மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. அப்போது நாடு முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதன் மூலம் பெரிய அளவிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்பதை நிரூபித்துள்ளோம். வரும் 2036-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்பது இந்தியாவின் கனவாகும். இந்த கனவை, நனவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயரப்பறக்க வைத்த இளைஞர்களும் இன்று நம்முடன் இருக்கிறார்கள். 140 கோடி நாட்டு மக்கள் சார்பாக, நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகளை நான் வாழ்த்துகிறேன். அடுத்த சில நாட்களில், பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க, பாரிஸ் நகருக்கு ஒரு பெரிய இந்தியக் குழு புறப்படும். அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர், ஆடவருக்கான ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x