Published : 14 Aug 2024 10:19 AM
Last Updated : 14 Aug 2024 10:19 AM

பயிற்சியாளராக விரும்புகிறேன்: இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்

பி.ஆர்.ஸ்ரீஜேஷ்

சென்னை: அண்மையில் நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றார். இந்நிலையில், இனி பயிற்சியாளராக பயணிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“நான் பயிற்சியாளராக விரும்புகிறேன். அது எனது திட்டங்களில் ஒன்று. ஆனாலும் அது எப்போது என்ற கேள்வி என் முன் உள்ளது. ஓய்வு பெற்றுள்ள நிலையில் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டியுள்ளது. இது தொடர்பாக அவர்களுடன் கலந்து பேச உள்ளேன். இதற்கு அவர்களது அனுமதி அவசியம்.

ராகுல் திராவிட் போல நான் ஜூனியர்களுடன் எனது பயணத்தை தொடங்க உள்ளேன். அவர்களை அங்கிருந்து சீனியர் அணியில் இடம்பெற செய்ய வேண்டும். நான் இந்த ஆண்டு இந்த பணியை தொடங்கலாம். அடுத்த ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் சீனியர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 2028-ல் என்னால் 20 அல்லது 40 வீரர்களை உருவாக்க முடியும். அவர்களில் 15 முதல் 20 பேர் வரை 2029-ல் சீனியர் அணியில் இடம் பிடிப்பார்கள். 2030-ல் இந்த எண்ணிக்கை 30 என கூடும்.

2032-ல் நான் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக செயல்படலாம். 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்தினால் நான் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

36 வயதான ஸ்ரீஜேஷ், தன்னுடைய 18 ஆண்டு கால விளையாட்டு கேரியரில் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற அணியில் விளையாடியவர். இரண்டு முறை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த கோல்கீப்பர் விருதை அவர் வென்றுள்ளார். ஹாக்கி உலக சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகள், காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் பதக்கம் வென்றுள்ளார். ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் பெருஞ்சுவர் என போற்றப்படுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x