Published : 13 Aug 2024 10:21 PM
Last Updated : 13 Aug 2024 10:21 PM

மத்திய அரசு ரூ.1.5 கோடி வழங்கியதா? - பேட்மின்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா மறுப்பு

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடுவதற்கு தனக்கு மத்திய அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று இந்திய பேட்மின்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.1.5 கோடி வழங்கப்பட்டதாக வெளியான தகவலையும் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மின்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆடிய அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறினர். இந்த சூழலில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்த ஒரு கட்டுரையை செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டது.

அதில், ஹெ.எஸ்.பிரணாய்க்கு ரூ.1.8 கோடி வழங்கப்பட்டதாகவும், அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ இருவருக்கும் தலா ரூ.1.5 கோடி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த செய்திக்கு அஸ்வினி பொன்னப்பா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சரியான தரவுகள் எதுவுமின்றி எப்படி ஒரு கட்டுரையை வெளியிட முடியும்? இப்படி ஒரு பொய்யை எவ்வாறு எழுதலாம்? தலா ரூ.1.5 கோடியா? யாரிடமிருந்து? எதற்காக? எனக்கு இந்த தொகை வழங்கப்படவில்லை.

நிதியுதவிக்காக எந்த அமைப்பிலோ அல்லது TOPSன் (Target Olympic Podium Scheme) ஒரு பகுதியாகவோ நான் இருக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் வரை நான் கலந்து கொண்ட போட்டிகளுக்கு எனக்கு நானே நிதியுதவி செய்தேன். அணியில் இணைவதற்கான தகுதியை அடைந்த பிறகுதான் இந்திய அணியுடன் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டேன்.

பாரிஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற பிறகுதான் நான் TOPS திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டேன், அவ்வளவுதான். இந்த உண்மைகளை சரிபார்க்காமல் இதை எப்படி எழுத முடியும்?

எங்களுடைய பயிற்சியாளரும் எங்களோடு பயணம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முன்வைத்த கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது” இவ்வாறு அஸ்வினி பொன்னப்பா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x