Published : 05 May 2018 06:03 PM
Last Updated : 05 May 2018 06:03 PM
இந்தூரில் நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதையடுத்து இந்த ஐபிஎல் தொடரில் முடிந்து விட்டது என்று நினைத்த மும்பை இந்தியன்ஸ் இன்னும் உயிருடன் தான் உள்ளது என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் 19 ஓவர்களில் 176/4 என்று வெற்றி பெற்றது.
கெய்ல், ராகுல் நல்ல தொடக்கம்:
கெய்லுக்கு மும்பை இந்தியன்ஸ் நன்றாக வீசினர். அவருக்கு அடிக்க போதிய கால அவகாசம், இடம் கொடுக்காமல் விலாவுக்கு வீசினர். அவர் மட்டையை சுழற்றும் லெந்த்களில் வீசவில்லை. இதனால் அவர் மந்தமாக 8 பந்துகளில் 1 ரன் என்றுதான் தொடங்கினார். ஆனால் ராகுலை கட்டிப்போட முடியவில்லை, அவர் மெக்லினாகன் பந்தை ஆஃப் சைடில் ஒதுங்கிக் கொண்டு எஸ்க்ட்ராகவரில் அடித்த சிக்ஸ் அபாரமானது.
இதனையடுத்து ஹர்திக் பாண்டியாவை வெளுத்துக் கட்டினார் கிறிஸ் கெய்ல். 3 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார், ஒவ்வொரு ஷாட்டும் பந்தே நசுங்கி விடும் அளவுக்கு இருந்தது, பொறுத்தது போதும் என்று நினைத்த கெய்ல், மெக்லினாகன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர் லெக்கில் அசுரத்தனமாக சிக்ஸ் அடித்தார். பவர் ப்ளேயில் 49/0 என்று இருந்தது கிங்ஸ் லெவன். 2 சிக்சர்களுடன் 24 எடுத்த ராகுல், மார்க்கண்டேயிடம் ஆட்டமிழக்க, கிறிஸ் கெய்ல் 40 பந்துகளில் அவரது தரத்துக்கு அதிக பந்துகள் எடுத்துக் கொண்டு 50 ரன்கள் எடுத்து பென் கட்டிங்கிடம் வெளியேறினார்.
யுவராஜ் சிங் திக்கித் திணறி 14 பந்துகளில் 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து இல்லாத சிங்கிளுக்கு ஓடி ரன் அவுட் ஆகி வெளியேறினார், இந்த ஐபிஎல்-ல் 6 இன்னிங்ஸ்களில் 34 ரன்களையே எடுத்து முடிந்தார். மனோஜ் திவாரிக்கு ஒரேயொரு போட்டி வாய்ப்பு கொடுத்து தூக்கியது சர்ச்சைக்குள்ளாகியது. பும்ரா அபாரமாக வீசி 4 ஓவர்களில் 19 ரன்களுக்கு 1 விக்கெட் வீழ்த்தினார் என்றாலும் 135/5 என்று கிங்ஸ் லெவன் இருந்த போது மும்பை கடைசி 3 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்தது. கருண் நாயர் 12 பந்துகளில் 23 ரன்களையும் ஸ்டாய்னிஸ் 193% ஸ்ட்ரைக் ரேட்டுடன் 29 ரன்களையும் எடுக்க கிங்ஸ் லெவன் 174/6 என்று ஓரளவு ரன்களை எட்டியது.
கிங்ஸ் லெவன் அணி பந்து வீச்சில் ஸ்பின் பவுலிங்கை நம்பியது. இதனால் எவின் லூயிஸ், இஷான் கிஷண் அடிக்க முடியவில்லை. முஜீப் வந்தார் உடனேயே எவின் லூயிஸை வீழ்த்தினார், 11 ஓவர்கள் முடியும் போது அஸ்வின் தன் 4 ஓவர்களை முடித்திருந்தார்.
மும்பைக்கு 54 பந்துகளில் சுமார் 100 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலை இருந்தது. இஷான் கிஷன் 3 சிக்சர்களுடன் 25 ரன்கள் எடுத்தார், சூர்ய குமார் யாதவ் மீண்டும் அபாரமாக ஆடி 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்து அசிங்கமான ஸ்ட்ரோக்கில் கேட்ச் ஆனார். ரோஹித்துக்கு முன்னால் ஹர்திக் இறங்கினார். 5ம் நிலையில்தான் ரோஹித் இறங்கினார், அவர் இறங்கும் போது 42 பந்துகளில் 75 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஹர்திக் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தது ஓரளவுக்கு உதவியது, இவர் ஆட்டமிழந்தவுடன் குருணால் பாண்டியா வந்தார். ஸ்டாய்னிஸ் தன் ஸ்லோயர் பந்துகளை பேக் ஆஃப் லெந்தில் வீசுவதற்குப் பதிலாக லெந்தில் வீச, பிறகு ஒரு புல்டாஸையும் வீச 17வது ஓவரில் 3 பவுண்டரிஅக்ள் 1 சிக்சர் விளாசப்பட்டது. 12 பந்துகளில் குருணால் 31 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 15 பந்துகளில் 24 நாட் அவுட், மும்பை ஒரு ஓவர் மீதம் வைத்து வென்றது.
இந்நிலையில் ஆட்டம் முடிந்ததும் ரோஹித் சர்மா கூறியதாவது:
நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம். நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஒவ்வொருவரும் திரண்டு எழுந்து அணியாக சிறப்பாக ஆடினோம். கிங்ஸ் லெவன் அணியின் பவர் பேட்டிங் பற்றி எங்களுக்குத் தெரியும்.
அந்த அணியை 174 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது மிகப்பெரிய முயற்சி.
விரட்டலில் நன்றாக உத்வேகம் பெற்றோம். ஹர்திக் அவர் பாணியில் ஆட வேண்டும், இதனால்தான் நானே அவருக்குப் பிறகு இறங்கினேன். முடிவில் எந்த மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.
இவ்வாறு கூறினார். அஸ்வின், “இந்தத் தொடர் அவ்வளவு எளிதல்ல” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT