Published : 24 May 2018 08:58 AM
Last Updated : 24 May 2018 08:58 AM

கவுதமுக்கு முன்னால் பின்னி! 4விக். மட்டுமே இழந்து ராஜஸ்தான் தோற்ற அதிசயம்; கொல்கத்தா வெற்றி

 

ஐபிஎல் 2018-ன் 2வது பிளே ஆஃப் ‘ராஜஸ்தான் வெளியேறுதல்’ சுற்றில் ராஜஸ்தான் வெளியேறியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்னொரு பிளே ஆஃப் சுற்றில் சன் ரைசர்ஸுடன் மோதுகிறது.

டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்த ராஜஸ்தான், கொல்கத்தாவை 169/7 என்று மட்டுப்படுத்தியது. கவுதம் (2/15), சோதி (15/0), ஷ்ரேயாஸ் கோபால் (34/1) அபாரமாக வீசி கட்டுப்படுத்தினர். தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்து உஷ் கண்டுக்காதீங்க தோல்வியை அடைந்தது.

ரஹானே ஆடியது சூழ்நிலைக்குத் தக்க இன்னிங்ஸா?

ரஹானே 41 பந்துகளில் 46 ரன்கள் என்று பார்க்கும் போது ஓரளவுக்கு நல்ல இன்னிங்ஸ் போல்தான் தெரியும். ஆனால் நடு ஓவர்களில் அவர் பவுண்டரி அடிக்க முடியவில்லை. 4 ஓவர்களில் 1 பவுண்டரிதான் அடித்தார். 20 ரன்களைத்தான் அவர் எடுத்தார். 15 ஒவர்கள் வரை நின்ற அவரது ஸ்ட்ரைக் ரேட் 112 என்பது போதுமானதல்ல. 15வது ஓவரில் ரஹானே ஆட்டமிழக்கும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் 109/1. 10 ஓவர்களில் 87/1 என்ற நிலையில் வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 8.30. 14 ஓவர் முடிந்து 15வது ஓவர் தொடங்கி ரஹானே, குல்தீப் யாதவ்விடம் அவுட் ஆகும் போது 109/1.

வெற்றிக்குத் தேவைப்படும் விகிதம் ஓவருக்கு 10.16. இதுதான் ரஹானே தன் அணிக்குச் செய்தது!! உதாரணத்துக்கு 10 பந்துகளில் 8 டாட்பால்களை ஒரு பேட்ஸ்மென் விடுகிறார் என்றால் ரன் வந்த அந்த 2 பந்துகளும் சிக்சர்களாக இருந்தால் அது ஸ்மார்ட் பேட்டிங் என்று கூறலாம் 10-ல் 8 டாட், ஆனால் ரன் வந்த அந்த 2 பந்துகளிலும் சிங்கிள் என்றால் அது வெட்டி பேட்டிங்தான், இந்த உதாரணம் போல்தான் இருந்தது ரஹானே பேட்டிங்.

கவுதமை இறக்காமல் ஸ்டூவர்ட் பின்னியை இறக்கியது:

சஞ்சு சாம்சன்(50) அவுட் ஆகி 17 ஓவர்கள் முடிவில் 127/3. 18 பந்துகளில் 43 ரன்கள் தேவை. அப்போது இந்தத் தொடரில் சில பினிஷிங்குகளைச் செய்த கவுதமை இறக்காமல் ஸ்டூவர்ட் பின்னியை இறக்கியது பேரதிர்ச்சி. பின்னி 3 பந்துகள் ஆடி ஸ்கோரர்களைத் தொந்தரவு செய்யாமல் வெளியேறினார். கவுதம் இறங்கும்போது 12 பந்துகளில் 40 ரன்கள் தேவை. சூப்பர் மேன் டிவில்லியர்ஸ், கெய்ல், ரஸல், பிராவோ போன்றோருக்கே இது சிரமமானது. பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 170 ரன்கள் பக்கம் வரை விரட்டும் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழக்கிறது என்றால் 94% போட்டிகளை வென்றுள்ளதாகக் கூறுகிறது கிரிக் இன்போ புள்ளிவிவரங்கள். ஆனால் அதிலும் தோற்று ஒரு விநோத சாதனையை நிகழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸாகவே இருக்க முடியும்.

தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரசல் அபாரம்

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ். நரைன், உத்தப்பாவை கவுதமிடம் இழந்து ராணாவை ஆர்ச்சரிடம் சொற்ப ரன்களுக்கு இழந்து 24/3 என்று ஆனது. கிறிஸ் லின் மரபான பேட்டிங் முறைக்குச் சென்றதால் 22 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவரிடமே கேட்ச் ஆக 51/4 என்று ஆனது. 8 ஓவர்களில் 51/4 என்றாலும் தினேஷ் கார்த்திக், ஷுப்மன் கில், ஆந்த்ரே ரஸல் உற்சாகமாக ஆடினர், மூவரும் 80 பந்துகளைச் சந்தித்து 129 ரன்களைச் சேர்த்தனர். உத்வேகத்தைக் குறைக்காமல் ஆடினர். தினேஷ் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 52 ரன்களையும் ஷுப்மன் கில் 17 பந்துகளில் 3 நான்குகள் 1 ஆறுடன் 28 எடுத்தார். ரஸல் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 49 ரன்கள். லாஃப்லின் (3ஓவர் 35/2), உனாட்கட் (2 ஓவர் 33) நன்றாக வாங்கினர். ஷ்ரேயஸ் கோபால் 3 ஓவர்கள் வரை பந்துகளைத் திருப்பி சிரமப்பட வைத்து 14 ரன்களையே கொடுத்தார், ஆனால் அவர் தன் கடைசி ஓவரில் தவறுகளிழைக்க கார்த்திக், ஷுப்மன் கில் பாய்ந்து 20 ரன்களைக் குவித்தனர்.

ராஜஸ்தான் இலக்கைத் துரத்தியபோது மீண்டும் திரிபாதி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 13 பந்தில் 20 ரன்கள் எடுக்க 5.1 ஓவரில் 47 என்ற நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் சாவ்லா அவரை தன் பந்தில் கேட்ச் ஆக்கி வெளியேற்றினார்.

சாம்சன் வெளுத்துக் கட்ட, ரஹானே சொதப்ப அடுத்த 9 ஒவர்களில் 62 ரன்கள்தான் வந்தது 7 ரன்களுக்கும் சற்று குறைவு. அப்போதுதான் ரஹானே குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். கவுதமை இறக்காமல் பின்னியை இறக்கியக் கதையைத்தான் ஆரம்பத்தில் விவரித்துள்ளோம், ஹென்ரிச் கிளாசனால் ரிஸ்ட் ஸ்பின்னை அடிக்க முடியவில்லை அவர் 18 பந்துகளில் 18 ரன்களையே எடுக்க முடிந்தது. கவுதம் 12 பந்துகளில் 40 ரன்கள் தேவை எனும்போது இறக்கப்பட்டதால் அவர் 7 நாட் அவுட். 4 விக்கெட்டுகளை இழந்து 144/4 என்று தோற்றது ராஜஸ்தான். ஆட்ட நாயகன் ரஸல். ஏனெனில் பவுலிங்கிலும் 3 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

ஐபிஎல் என்பது ஒரு மெகா பிராண்ட், அணிகள் குட்டிக் குட்டி பிராண்ட்கள், இந்த வணிகத் தர்க்கத்தில் என்ன கணக்கீடுகளின் படி அணிகள் வெற்றி பெறுகிறது என்பது புரியாத புதிர். இந்தப் புதிரின் அடிப்படையில்தான் இந்தக் கொல்கத்தா வெற்றியையும் பார்க்க வேண்டியுள்ளது. சன் ரைசர்சுடன் நாக் அவுட்டில் விளையாடுகிறது கொல்கத்தா.

“5 வருடங்களுக்கு யார் ஆட்சி செய்தாலும், முடிந்தவரைக்கும் அவருக்கு ஒத்துழையுங்கள்” - விஜய் ஆண்டனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x