Published : 10 Aug 2024 04:04 AM
Last Updated : 10 Aug 2024 04:04 AM

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று போட்டி நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்தார். இதனால், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: வரலாற்று சாதனை படைத்துள்ள தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியராக அவர் உள்ளார். அவரால் இந்தியாவே பெருமை கொள்கிறது. அவரது சாதனை அடுத்த தலைமுறையினருக்கு பெரிய அளவில் ஊக்கமளிக்கும். எதிர்காலத்தில் இந்தியாவுக்காக மேலும் பல பதக்கங்கள் மற்றும் பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுத் தருவார் என இந்தியா எதிர்நோக்குகிறது.

பிரதமர் மோடி: தடகள வீரர் நீரஜ் சோப்ரா சிறந்த விளையாட்டு ஆளுமை கொண்டவர். மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியாவே மகிழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்கி, நம் தேசத்தை பெருமை கொள்ள செய்வதற்கு அவர் ஊக்கமாக இருப்பார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x