Published : 30 May 2018 07:46 AM
Last Updated : 30 May 2018 07:46 AM
ப
திமூன்றாவது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி மெக்ஸிகோவில் 1986-ம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 28 வரை கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு கொலம்பியா தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் பொருளாதாரச் சிக்கல் காரணமாக உலகக் கோப்பையை நடத்த முடியாது என அந்நாடு தெரிவித்துவிட்டது.
மொத்தம் 24 நாட்டின் அணிகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. காலிறுதியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், பெல்ஜியம் 5-4 என ஸ்பெயினையும், பிரான்ஸ் 4-3 என பிரேசிலையும், மேற்கு ஜெர்மனி 4-1 என மெக்ஸிகோவையும் வீழ்த்தின. அரை இறுதியில் அர்ஜென்டினா, மேற்கு ஜெர்மனி அணிகள் வென்றன.
இறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவும், மேற்கு ஜெர்மனியும் பலப்பரீட்சையில் இறங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் 80-வது நிமிடத்தின்போது 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. ஆட்டம் முடிய கடைசி 7 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது ஜாம்பவான் மரடோனா அழகான கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதை சரியாகப் பயன்படுத்திய ஜார்ஜ் புருசாஹா கோலடிக்க, அர்ஜென்டினா 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்த மரடோனா சிறந்த வீரராக தேர்வானார். அவருக்கு கோல்டன் பால் விருதும், அதிக கோலடித்தவரான இங்கிலாந்து வீரர் கேரி லினிகெருக்கு கோல்டன் பூட்ஸ் விருதும் வழங்கப்பட்டன. மரடோனாவின் மாயாஜால ஆட்டத்தால் கோப்பையை வென்றது அர்ஜென்டினா.
காலிறுதியின்போது இங்கிலாந்தும், அர்ஜென்டினாவும் மோதின. அதில் அர்ஜென்டினா கேப்டன் டீகோ மரடோனா தலையால் முட்டி முதல் கோலை அடித்தார். அப்போது அவருடைய கையும் பந்தின் மீது பட்டதை கவனிக்கத் தவறிய நடுவர் அதை கோல் என அறிவித்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கோலை கடவுளின் கையால் கிடைத்த கோல் என மரடோனா கிண்டலாகக் கூறினார். இன்று வரை அந்த கோல் “ஹேன்ட் ஆப் காட்” கோல் என்றே அழைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT