Published : 09 Aug 2024 11:34 PM
Last Updated : 09 Aug 2024 11:34 PM
பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் 13-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ரெய் ஹிகுச்சியிடம் இந்திய வீரர் அமன் ஷெராவத் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸ் உடன் அமன் ஷெராவத் மோதினார். போட்டி தொடங்கிய முதல் ஒரு நிமிடத்துக்குள்ளாகவே ஆதிக்கம் காட்டிய டேரியனுக்கு ஒரு புள்ளி கிடைத்தது. ஆனால் அடுத்த ஒரு சில நொடிகளிலேயே அமனின் கை ஓங்கியது.
அடுத்தடுத்து புள்ளிகளை அதிகரித்து அதிரடி காட்டிய அமன், முதல் பாதி முடிவில் ஆறுக்கு மூன்று என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் மூக்கில் ரத்தம் வழிய களமிறங்கிய அமன், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை ஏற்றினார். ஆறு நிமிட முடிவில் 13-5 என்ற கணக்கில் டேரியன் டாய் க்ரூஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார் அமன் ஷெராவத். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
யார் இந்த அமன் ஷெராவத்? - சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த அமன் ஷெராவத் 10 ஆண்டுகள் கழித்து இன்று உலக அரங்கில் ஒலிம்பிக்கில் இளம் நாயகனாகத் திகழ்கிறார். மல்யுத்தத்தை தொடரும் வகையில் பல்வேறு தடைகளைத் தாண்டி நண்பர்களின் உதவியால் துரோணாச்சாரியா விருது பெற்ற பயிற்சியாளர் லலித் குமாரிடம் சேர்ந்தார்.
டெல்லியின் சத்ரசல் ஸ்டேடியத்தில் நுழையும்போது அவருக்கு 10 வயது தான். அதுதான் அமனுக்கு எல்லாமுமாக இருந்த இடம். குறிப்பாக அந்தக் காலக்கட்டத்தில் அவரின் அறைத் தோழராக இருந்த சாகர் அவருக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். மல்யுத்த வீரரான சாகர், இந்திய விமானப் படையில் பணியாற்றுகிறார். நண்பர், சகோதரர், ஏன் பெற்றோர் இடத்திலிருந்து அவருக்கு உதவி செய்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தஹியாவை இன்ஸ்பிரேஷனாக கொண்டிருந்தார்.
2021-ம் ஆண்டு தனது 18-ஆவது வயதில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தினார் அமன் ஷெராவத். தொடர்ந்து 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2022-ல் ஸ்பெயினில் நடைபெற்ற U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். அதைத் தொடர்ந்து கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற 2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் சீனாவின் ஜூவான்ஹாவோ-வை 10-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் பதக்கம் வென்றார். தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT